நெல்லை ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வட மாநில இளைஞர் ஒருவர் பயணிகளை துரத்தி துரத்தி தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையம், நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்லும் முக்கியமான ரயில் நிலையம் ஆகும்.
இந்த நிலையில் நேற்று இரவு ரயில் நிலையத்தில் வழக்கம் போல் கூட்டம் அலைமோதியது.
அப்போது வடமாநில இளைஞர் ஒருவர் தனது கையில் கட்டையை வைத்துக்கொண்டு அங்கிருந்த பயணிகளை தாக்கியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் தற்காத்துக் கொள்வதற்காக அங்கும் இங்கும் ஓடினர்.
எனினும் அந்த இளைஞர் விடாமல் விரட்டி விரட்டி தாக்கியதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து அந்த இளைஞர் ரயில் நிலையத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த சூழலில் காயமடைந்த கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தங்கப்பன், தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியை சேர்ந்த பாண்டிதுரை, கேரளாவை சேர்ந்த பிரசாத் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தங்கப்பன் இன்று உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பயணிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
தாக்குதல் நடத்திய வட மாநில இளைஞரை கண்டுபிடிக்க ரயில் நிலையம் மற்றும் அதன் வெளிப்பகுதிகளில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தனர்.
இந்த சூழலில் தச்சநல்லூர் தண்டவாளத்தின் அருகே ரத்தக்கரை படிந்த சட்டையுடன் ஒருவர் இருப்பதை அறிந்து அங்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த நபர் தான் ரயில் நிலையத்தில் பயணிகளை தாக்கியவர் என்பதும் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ் என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து ரயில்வே போலீசார் அவரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட போது, அவர் உரிய பதில் அளிக்கவில்லை. மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருந்தார் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
எனினும் அவர் நடிக்கிறாரா? யார் இவர்? எதற்காக தமிழ்நாடு வந்தார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.