ADVERTISEMENT

ரயில்களில் வட மாநில தொழிலாளர்கள் அத்துமீறல் புகார் – தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு!

Published On:

| By Pandeeswari Gurusamy

Northern state workers trespass on trains

வடமாநிலம் செல்லக்கூடிய ரயில்கள் மற்றும் தொலைதூரம் செல்லக்கூடிய ரயில்களில் டிக்கெட் பரிசோதகர்கள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்யும் பயனாளர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பின்னலாடை தொழில் நகரமாக அறியப்படும் திருப்பூரில், நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வந்து பணிபுரிகிறார்கள். குறிப்பாக பீகார், ஒடிசா, ஜார்கண்ட் போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இங்குள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி குடும்பத்தினருடன் பண்டிகையை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் திருப்பூரிலிருந்து தங்கள் மாநிலங்களுக்குச் செல்ல தொடங்கியுள்ளனர்.

ADVERTISEMENT

சில தினங்களுக்கு முன் திருப்பூர் ரயில் நிலையம் முழுவதும், வட மாநில தொழிலாளர்களின் கூட்டம் அலைமோதியது. அங்கு வந்த பாட்னா சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (Train No: 22669) ரயிலில் குறிப்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பெருமளவில் ஏறியிருந்தனர். ஆனால் அதில் S5 என்ற ஸ்லீப்பர் பெட்டியில் நடந்த ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த பெட்டியில் பயணம் செய்த ஒருவர் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நாங்கள் மொத்தம் 13 பேர், எர்ணாகுளத்தில் இருந்து காட்பாடி வரை சரியாக டிக்கெட் புக் செய்து வந்தோம். ஆனால் திருப்பூர் வந்தவுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் எங்கள் பெட்டியில் முன்பதிவு டிக்கெட் இல்லாமலே ஏறி வந்தனர். எல்லோரும் ஓபன் டிக்கெட் எடுத்து ஏறியவர்கள்தான். இதனால் நாங்கள் உட்கார முடியவில்லை, உறங்க முடியவில்லை. கழிவறை போகவே முடியவில்லை. பான் பராக் சாப்பிட்டு பெட்டிக்குள் அசுத்தம் செய்கிறார்கள். இதனால் பெண்கள், குழந்தைகளுடன் பயணிக்கும் குடும்பங்களும் பெரும் அவதி அடைந்ததாகவும், இது குறித்து டிக்கெட் பரிசோதகர்களிடம் முறையிட்ட போதும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து கேள்வி எழுப்பினால் யாரிடம் வேண்டுமானாலும் புகார் சொல்லுங்கள்! என்ற மாதிரி அலட்சியமாகவே பதில் அளித்ததாகவும் பயணிகள் குற்றம் சாட்டினர். மேலும், ரயில்வே அதிகாரிகளிடம் புகார் அளித்த போதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.

ADVERTISEMENT

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், வடமாநிலம் செல்லக்கூடிய ரயில்கள் மற்றும் தொலைதூரம் செல்லக்கூடிய ரயில்களில் டிக்கெட் பரிசோதகர்கள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்யும் பயனாளர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு நிலையத்திலும் டிக்கெட் பரிசோதகர்கள் தங்களுக்கென்று கொடுக்கப்பட்ட பெட்டிகளில் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் மட்டுமே பயணம் மேற்கொள்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

முன்பதிவு பெட்டிகளில் பயணிகளின் புகார்களுக்கு டிக்கெட் பரிசோதகர்கள் நேரில் சென்று உடனடியாக சோதனை செய்வதோடு விதிகளை மீறி பயணம் செய்பவர்களுக்கு உரிய அபராதம் விதிக்க வேண்டும். அந்த பெட்டிகளிலிருந்து அவர்களை கீழே இறக்க வேண்டும். டிக்கெட் பரிசோதகர்கள் உரிய நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் அவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கையை தீவிரபடுத்த இருப்பதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் பயணிகள் தொடர்புடைய புகார்களுக்கு ரயில்வே பாதுகாப்புபடை காவலர்களை அழைத்து சரி செய்துகொள்ளுமாறும் டிக்கெட் பரிசோதகர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share