தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வட மாநில இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் கே.வி.ஆர் நகர் பகுதியில் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிலும் கதிரவன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளியை திமுக சுற்றுச்சூழல் பிரிவு மாநில துணைச்செயலாளர் நாராயணமூர்த்தி நடத்தி வருகிறார்.
அந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமி நேற்று கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த கழிவறையை சுத்தம் செய்து கொண்டிருந்த அசாம் மாநில இளைஞர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமி வகுப்பாசிரியரிடம் கூறியுள்ளார். ஆனால் வகுப்பு ஆசிரியர் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாலையில் வீட்டுக்கு சென்ற சிறுமி தனது தாயிடம் பிறப்புறுப்பில் வலி ஏற்படுவதாக கூறினார். மேலும் பள்ளியில் நடந்த சம்பவத்தையும் கூறியுள்ளார்.

போராடிய பெற்றோர் கைது!
இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தனியார் பள்ளியை இன்று காலை முற்றுகையிட்டனர். அப்போது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவரை கைது செய்ய கோரி முழக்கங்களை எழுப்பினர்.
இதில் பள்ளி தரப்பில் முறையான பதில் அளிக்காமல் அலட்சியமாக இருந்ததால் ஆத்திரமடைந்த 300க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். காலை முதல் 4 மணி நேரமாக தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களை குண்டு கட்டாக தூக்கி வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர்.
போக்சோ வழக்கில் கைது!
இதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அசாமை சேர்ந்த ஜெய் (27) என்பவரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெய் சிறையில் அடைக்கப்பட்டார்.