ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த லாஸ்லோ க்ராஸ்னாஹோர்காய்க்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு இன்று (அக்டோபர் 9) அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
அதன்படி அக்டோபர் 6ஆம் தேதி கடந்த 3 நாட்களாக ஒவ்வொரு நாளும் மருத்துவம், இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
அதன்படி உலக இலக்கியத்திற்கு தங்கள் நாவல்கள், கவிதைகள் அல்லது பிற இலக்கியப் படைப்புகள் மூலம் விதிவிலக்கான பங்களிப்புகளைச் செய்த எழுத்தாளர்களை கௌரவிக்கும் விதமாக இலக்கியத்திற்கான நோபல் பரிசு சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கான பிரிவில் மொத்தம் 5 போட்டியாளர்கள் முன்னணியில் இருந்தனர்.
ஹருகி முரகாமி (ஜப்பான்): காஃப்கா ஆன் தி ஷோர் போன்ற படைப்புகளில் தனது மாயாஜால கதை சொல்லலுக்காகக் கொண்டாடப்படுகிறார்.
சல்மான் ருஷ்டி (இந்தியா வம்சாவளி/யுகே): வரலாற்றையும் கற்பனையையும் பின்னிப்பிணைக்கும் மிட்நைட்ஸ் சில்ட்ரன் என்ற புத்தகத்திற்காக போட்டியில் உள்ளார்.
கேன் சூ (சீனா): 2019 ஆம் ஆண்டு மேன் புக்கர் சர்வதேச பரிசுக்கு பட்டியலிடப்பட்ட லவ் இன் தி நியூ மில்லினியம் என்ற நாவல் உள்ளது.
லாஸ்லோ க்ராஸ்னாஹோர்காய் (ஹங்கேரி): சடான்டாங்கோ மற்றும் தி மெலஞ்சலி ஆஃப் ரெசிஸ்டன்ஸ் போன்ற இருண்ட, தத்துவ நாவல்களுக்காக கவனிக்கப்பட்டார்.
மார்கரெட் அட்வுட் (கனடா): பாலினம் மற்றும் சமூக நீதிக்கான அவரது கவனம் ஆகியவற்றிற்காகப் பாராட்டப்பட்டார்.
இந்த நிலையில் பலரும் எதிர்பார்த்தபடி இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு ஹங்கேரி நாட்டை சேர்ந்த லாஸ்லோ க்ராஸ்னாஹோர்காய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு தொடர்பாக நோபல் பரிசு கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”2025 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ க்ராஸ்னாஹோர்கைக்கு வழங்கப்படுகிறது. அபோகாலிப்டிக் பயங்கரத்தின் மத்தியில், கலையின் சக்தியை மீண்டும் உறுதிப்படுத்தும் அவரது கவர்ச்சிகரமான மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட படைப்புக்காக இந்த பரிசு வழங்கபடுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு பரிசுத் தொகையாக 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (தோராயமாக ₹10.3 கோடி), தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
நோபல் பரிசு விருது வழங்கும் விழா டிசம்பர் 10 ஆம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு பற்றி…
சுவீடன் நாட்டு விஞ்ஞானியும் கண்டுபிடிப்பாளருமான ஆல்ஃபிரட் பெர்ன்ஹார்ட் நோபலால் 1895 இல் நிறுவப்பட்ட நோபல் பரிசுகள் முதன்முதலில் 1901ஆம் ஆண்டு இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளுக்கு வழங்கப்பட்டன. பொருளாதார பரிசு பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டது.
1901 முதல் 2024 வரை மொத்தம் 121 எழுத்தாளர்கள் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றுள்ளனர்.