திமுகவை கூட்டணி கட்சியான காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை திருமங்கலத்தில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளிடையே மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசியதாவது: காங்கிரஸ்காரங்களுக்கு பூத்ல ஆள் இல்லைன்னு சொல்றவங்களுக்கு பதில் சொல்லணும். காசு இல்லாம இருக்கலாம், பிரியாணி கொடுக்க வசதி இல்லாம இருக்கலாம், ஆனா ஒரு வடைக்கும் டீக்கும் நம்மகிட்ட காசு இருக்கு. அந்த வடை, டீயை வச்சாவது நம்ம வண்டிய ஓட்டுவோம்.
திமுகவுக்குல இருக்கிற சில அமைச்சர்கள் பேசுறது வருத்தமா இருக்கு. கூட்டணி வந்தா வரட்டும், வராட்டி போகட்டும்னு அசால்ட்டா பேசுறாங்க. நம்ம தலைவர் ராகுல் காந்தி அவர்கள், தமிழக முதலமைச்சரை ‘சகோதரர்’ (My Elder Brother) அப்படின்னு அன்போட கூப்பிடுறாரு. ஆனா, கீழ இருக்கிற சில மாவட்டச் செயலாளர்கள், தளபதி போன்றவங்க பேசுற பேச்சு ரொம்ப வருத்தத்தை தருது.
ஜனவரி 26-ஆம் தேதி அவர் மேல நடவடிக்கை எடுக்கணும்னு எங்க தலைவர் செல்வப்பெருந்தகை அவர்கள் கடிதம் கொடுத்தும், இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை, அவர் வருத்தமும் தெரிவிக்கல. எங்களை மதிச்சா நாங்க மதிப்போம், இல்லன்னா நாங்க திருப்பி அடிப்போம்.
எனக்கு எம்பி பதவி எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. நான் விருதுநகர்ல மறுபடியும் எம்பியா நிக்கப்போறதும் இல்லை. எனக்கு என் கட்சி தான் முக்கியம், காங்கிரஸ் கட்சி தான் என் உயிர். சாகும் வரை காங்கிரஸ்காரனா தான் சாவேன். நம்மளோட போராட்டம் காங்கிரஸ்காரனோட மரியாதைக்கான போராட்டம். நாங்க ஒன்னும் கமிஷனோ, கான்ட்ராக்ட்டோ கேட்கல. காமராஜர் வழியில வந்தவங்க நாங்க, நேர்மையா இருக்கணும்னு நினைக்கிறோம்.
வர்ற 25-ஆம் தேதிக்குள்ள திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி தொகுதிகள்ல நம்ம பூத் கமிட்டி (BLA 2) கூட்டத்தை நடத்தி நம்ம பலத்தை காட்டணும். நம்மகிட்ட ஆள் இல்லைன்னு சொல்றவங்க வாயை மூட வைக்கணும். இவ்வாறு மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசினார்.
