சென்னையில் பணிபுரியும் ஆண்கள்/பெண்களுக்கான விடுதிகள் குடியிருப்புகளாகவே கருதப்பட வேண்டும் என்றும், அவற்றிற்கு வணிகரீதியான விகிதத்தில் சொத்து வரி விதிக்கக் கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள விடுதிகளை வணிகக் கட்டிடங்களாகக் கருதி, அதற்கான சொத்து வரி மற்றும் பிற வரிகளைச் செலுத்தக் கோரி மாநகராட்சி பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து ஹாஸ்டல் உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 11) விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபர்ணா நந்தகுமார், இதுபோன்ற வரி விதிப்பை அமல்படுத்தினால், அந்த கூடுதல் சுமை விடுதிகளில் தங்கும் மாணவர்களுக்கும், பணிபுரிபவர்களுக்கும் தான் வந்து சேரும் என்று வாதங்களை முன்வைத்தார்.
இதை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, விடுதிகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிபுரியும் பெண்களுக்கு குடியிருப்பு கட்டிடங்கள் தானே தவிர, வணிக கட்டிடங்களாக கருத முடியாது. தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கும் நிலையில் இல்லாதவர்கள் தான் விடுதிகளில் தங்குகின்றனர். இந்தச் சேவையைப் பெறுபவரின் பயன்பாடு குடியிருப்பு நோக்குடையதாகவே உள்ளது. எனவே, அவற்றை வணிகப் பிரிவின் கீழ் வரி விதிக்க முடியாது. ஹாஸ்டல்களுக்கு குடியிருப்புக் கட்டிடங்களுக்கான வரியை மட்டுமே வசூலிக்க வேண்டும். சொத்து வரி வசூலிக்கப்படக் கூடாது” என்று கூறி சென்னை மாநகராட்சியின் உத்தரவை ரத்து செய்தார்.
