தமிழகத்தில் ஆட்சியில் பங்கு கேட்பது என்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை முடிவு அல்ல என்று அக்கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று பிப்ரவரி 11-ந் தேதி செய்தியாளர்களிடம் மு.வீரபாண்டியன் கூறியதாவது: பாஜக கூட்டணி ஒரு தோல்வியடையும் கூட்டணி என்பது உறுதி. ஏனென்றால், தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் ஒற்றுமையை விரும்புவார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனித்து நின்றால் கூடப் போட்டி கடுமையாக இருக்கும். ஆனால், தமிழ்நாட்டின் உரிமைகளைத் தாக்குகிற, அதிகாரத்தைக் குவிக்கிற, நாட்டின் விழுமியங்களைச் சிதைக்கிற, நீண்ட நெடுங்கால மக்கள் ஒற்றுமையைக் கெடுக்கிற பாஜக-வுடன் அவர்கள் கூட்டணி சேர்ந்திருப்பதால் அவர்களுக்குத் தோல்வி உறுதி.
திமுக தலைமையிலான எங்கள் கூட்டணி வெல்லும். இது வெறும் பலத்திற்காகச் சொல்லவில்லை, தமிழக அரசின் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைந்திருப்பதாலும், தமிழ் மக்களின் ஒற்றுமைச் சிந்தனையாலும் நாங்கள் வெல்வோம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் போராட்டப் பணிகளிலும், ஏழை எளிய மக்களுக்காக வேலை செய்வதிலும் இருக்கும். இப்போது தேர்தலையும் சந்திப்போம். கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பு ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்க அவசியம். பாஜக மற்றும் அதன் கூட்டணியை வீழ்த்துவதே எங்கள் நோக்கம்.
கூடுதல் இடங்களை இந்த முறை பேச்சுவார்த்தை மூலம் கேட்டுப் பெறுவோம். இதை திமுக தலைமை கூட்டணிக்கான நெருக்கடியாக பார்க்காது. மாநிலக் குழு கூடி எந்தெந்த இடங்கள் என்று வரிசைப்படுத்தி, முதலில் ஊடகங்களுக்குத் தெரிவிப்போம்.
மத்தியில் கூட்டாட்சி முறை என்ற சூழ்நிலை வரும்போது குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் முடிவெடுப்போம். கடந்த காலங்களில் அப்படி நடந்து கொண்டோம். தமிழ்நாட்டில் இப்போது அதுபோன்ற உரையாடல் இல்லை. ஆட்சியில் பங்கு கேட்பது என்கிற ஒரு கொள்கை முடிவை நாங்கள் எடுக்கவில்லை. சில இடங்களை கேட்டுப் பெறுகிற நிலையில்தான் நாங்கள் இருக்கிறோம்.
தேர்தல் அறிக்கை குழுவை அறிவித்துவிட்டோம், விரைவில் பேச்சுவார்த்தைக் குழுவை அமைத்து இடங்களைப் பற்றிப் பேசுவோம். இவ்வாறு மு.வீரபாண்டியன் கூறினார்.
