2026 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் பாஜக காணாமல் போகும் என்று அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று (அக்டோபர் 29) செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழக சட்டத்துறை அமைச்சருமான எஸ். ரகுபதி பேசுகையில், “தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி அரசியல் ரீதியாகப் பேசப்படுவதும், ஊடகங்களில் கவனம் பெறுவதும் தற்காலிகமானதே. இதன் பின்னணியில் ஊடக வெளிச்சம் தவிர்த்து உண்மையான மக்கள் ஆதரவு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. எதிர்கட்சியான அ.தி.மு.க.வின் பலவீனத்தால் தான், பா.ஜ.க. தங்களுக்கு ஒரு இடம் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறது.
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் பாஜகவின் அரசியல் இருப்பும், அதன் செல்வாக்கும் முற்றிலுமாக இல்லாமல் போய்விடும். 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மீண்டும் மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி” என்றார்.
தொடர்ந்து அவர், “திமுக அரசு மீது தவெக தலைவர் விஜய்க்கு அதிருப்தி உள்ளது. அதனை தான் அவர் வெளிபடுத்தியுள்ளார். தமிழக மக்கள் தி.மு.க. அரசின் செயல்பாடுகளில் மிகுந்த திருப்தியில் உள்ளனர். நெல் கொள்முதல் விவகாரத்தில் விவசாயிகளுக்கு தேவையான நஷ்ட ஈடு கொடுக்கப்பட்டு வருகிறது. எந்த பொதுமக்களும் பாதிக்கப்படவில்லை” என ரகுபதி பேசினார்.
