விஜய் கூட்டத்திற்கு பாஸ் தேவை இல்லை – கே.ஏ.செங்கோட்டையன்

Published On:

| By Pandeeswari Gurusamy

ஈரோட்டில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழக கூட்டத்திற்கு வருபவர்களுக்கு பாஸ் தேவை இல்லை என கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி நடந்த தவெக கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசிக்கொண்டிருந்த போது ஏற்றபட்ட கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில் தமிழகத்தில் அக்கட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் 18ம் தேதி விஜய் ஈரோட்டில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்த கூட்டத்திற்கான முன்னேற்பாடுகளை அக்கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, ”தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜயமங்கலம் சரளைப் பகுதியில் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் உரையாற்ற உள்ளார். இந்த உரையைக் காண திரளான மக்கள் வருகை தர உள்ளனர். காவல்துறை விதிமுறைகளை பின்பற்றி கர்ப்பிணி பெண்கள் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் போன்றவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுவாகவே எல்லா கட்சிகளின் தலைவர்களும் கூட்டத்தில் அலை கடலென திரண்டு வாருங்கள் என்று கூறுவார்கள். நாங்களுக்கும் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வைக்க வேண்டும் என்று தான் விரும்புகிறோம். ஆனால் இந்த பிரச்சார கூட்டம் நல்ல முறையில் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இது போன்ற கோரிக்கையை முன் வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றி கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து உள்ளோம்.

ADVERTISEMENT

போதுமான குடிநீர், பாதுகாப்பு அரண்கள், கழிப்பிட வசதி மற்றும் ஆம்புலன்ஸ் வசதி, தீயணைப்பு வாகனங்கள் போன்றவை அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்படும். இது மட்டுமின்றி 40 டிஜிட்டல் பேனர்கள் வைத்து இதுவரை தமிழகமே கண்டிராத வகையில் சிறப்பான முறையில் தலைவர் விஜய்க்கு வரவேற்பு தருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

பெரியார் பிறந்த மண்ணான ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பாண்டிச்சேரியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்திற்கு பிறகு பெரும் வரவேற்பு கிடைக்கும் வகையில் இந்த கூட்டத்தை நடத்தி முடிப்போம்.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர் அணியினர் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் பணியாற்றுவார்கள்.

இந்தக் கூட்டம் பகல் 11 மணி முதல் 1 மணிக்குள் நடைபெற்று முடிந்து விடும் கூட்டம் நடைபெறும் நாளில் விஜய் காலை விமானம் மூலமாக சென்னையிலிருந்து கோவை வந்து தரை மார்க்கமாக கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வருகிறார்.

இந்த கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தொண்டர்களும், பொதுமக்களும் மட்டுமே கலந்து கொள்வார்கள். பாஸ் மற்றும் டோக்கன் எதுவும் வழங்குவதாக இல்லை, என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share