கரூர் உயிரிழந்த சிறுவனின் தந்தை தரப்பில் சிபிசி விசாரணை கோரி பல்வேறு கேள்விகளுடன் வாதம் முன்வைக்கப்பட்ட நிலையில், சிபிஐ விசாரணை தேவை இல்லை என தமிழக அரசு தரப்பிலும் கடும் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.
இதுதொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக் கோரி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 10 வயது சிறுவனின் தந்தையான பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சரியா அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதார தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.எஸ்.நாயுடு, “கரூர் கூட்ட நெரிசலில் என் மனுதாரரின் 10 வயது மகன் இறந்துள்ளார். எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும் அதனை சரியாக கண்காணிக்க வேண்டும். ஆனால் பொறுப்பாக இருக்க வேண்டிய காவல்துறையினர், அதைக் கைவிட்டுவிட்டனர்” என குற்றஞ்சாட்டினார்.
கூட்டாட்சித் தத்துவத்தின் எதிரானது!
அப்போது அரசு தரப்பில் ஆஜரான அபிஷேக் சிங்வி, “இது தொடர்பாக தமிழக அரசு தரப்பில், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் மற்றொரு விசாரணையும் நடைபெறுகிறது. தற்போது உயர்நீதிமன்றம் திறமையான அதிகாரி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது. அதனால் சிபிஐ விசாரணை தேவை இல்லை” என்றார்.
ஆரம்ப கட்டத்திலேயே சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு தடை கோரப்படுகிறது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்திற்கு விதிவிலக்கு இல்லாமல் அரசு ஒப்புதல் அளிக்காமல், சிபிஐ அனுமதி பெற முடியாது. இது கூட்டாட்சித் தத்துவத்தின் எதிரானது.
தன்னுடைய மகனை இழந்து இங்கு நிற்கக்கூடிய அந்த தந்தையினுடைய வலி மட்டுமல்ல, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடைய அனைவரின் வலியையும் நாங்கள் அறிந்துள்ளோம். அதேவேளையில், தான் பாதிக்கப்பட்டுள்ளேன் என்ற இந்த ஒரு காரணத்தின் அடிப்படைக் கொண்டு மட்டும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற அனுமதிக்க கூடாது. ஏனெனில் கள நிலவரங்கள் அனைத்தையும் அறிந்தவர்கள் தமிழ்நாடு அதிகாரிகள்.
எனவே ஒரு சிறந்த அதிகாரியின் தலைமையில் அமைக்கப்பட்ட அந்த சிறப்பு விசாரணைக் குழுவில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர வேண்டும். இவ்வாறு பல வழக்குகளை தொடர்ச்சியாக சிபிஐ-க்கு மாற்றிக் கொண்டிருந்தால் சிபிஐ முன்பு அதிக அளவிலான வழக்குகள் குவிந்து கிடக்கும். ஆனால் சிபிஐக்கு இருப்பதோ Limited Resourceதான்” என வாதிட்டார்.
கூட்டத்திற்குள் ரவுடிகளை போலீசார் அனுமதித்தனர்!
அதற்கு நாயுடு, ”கரூரில் விஜய் பரப்புரை தொடங்குவதற்கு முன்பே, பிற்பகல் 3:15 மணிக்கு, திமுக உறுப்பினர் ஒருவர், ஒரு தீவிரமான நிகழ்வு நடக்கப் போகிறது என்று சமூகவலைதளங்களில் குறிப்பிட்டுள்ளார். ஏதோ தீவிரமான ஒன்று நடக்கப் போகிறது என்பது அவர்களுக்கு தெரியும். காலணிகளை வீச கூட்டத்திற்குள் ரவுடிகளை போலீசார் அனுமதித்தனர். திடீரென வந்த போலீசார், கூட்டத்தில் இருந்தவர்கள் மீது தடியடி நடத்தினர். கூட்டத்திற்குள் செந்தில் பாலாஜியின் பெயருடன் கூடிய தண்ணீர் பாட்டில்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் நம்பர் பிளேட் இல்லாமல் அனுமதிக்கப்பட்டன.
விசாரணைக்கு முன்பே காவல்துறை மீதே தவறு இல்லை என்றும், அனைத்து தவறும் விஜய் மீது என்று கூறும்போது நியாயமான விசாரணை நடக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது” என்று வாதிட்டார்.
முழு தவறும் மாநில காவல்துறை மீது உள்ளது!
மேலும் அவர், “செப்டம்பர் 27 ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு சம்பவம் நடந்தது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இரவு 9-10 மணிக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 10:30 மணிக்கு 30 உடல்களுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, காலை 4 மணிக்கு தகனம் செய்யப்பட்டது.
நள்ளிரவில் நடந்த இத்தனை உயிர்களின் பிரேத பரிசோதனைக்கு இவ்வளவு மருத்துவர்கள் திடீரென்று எப்படி வந்தார்கள் என்பது தெரியவில்லை.
செப்டம்பர் 30ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் தினேஷ் ரிட் மனு தாக்கல் செய்தார். அதன்படி 12:56 மணிக்கு வழக்கறிஞர் ஜெனரல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது, அது அக்டோபர் 3 அன்று பிற்பகல் 5:02 மணிக்கு தான் அடைந்தது. ஆனால் 4 மணிக்கே உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துவிட்டது.
கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் கடந்த ஜனவரி மாதம் அதிமுக தரப்பில் அனுமதி கோரப்பட்டது. அதற்கு காவல்துறையினர் அது குறுகிய இடம் என்றும் நாங்கள் அனுமதி வழங்க முடியாது என்றும் கூறினர். ஆனால் செப்டம்பரில் அதே இடத்தில் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் அதே இடம் தவெகவிற்கும் வழங்கப்பட்டது. எனது தாழ்மையான சமர்ப்பிப்பு என்னவென்றால், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு முழு தவறும் மாநில காவல்துறையினரிடம் உள்ளது” என வாதிட்டார்.
ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை!
அப்போது ஆளும் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், “தவெக பரப்பரை விபத்தைத் தொடர்ந்து 20 மருத்துவர்கள், 165 செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் அணிதிரட்டப்பட்டதாக எங்கள் சுகாதாரச் செயலாளர் தெளிவுபடுத்தினார். வழக்கமாக, பிரேத பரிசோதனை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். ஆனால் கரூர் துயரத்திற்காக கலெக்டர் அனுமதி அளித்தார்.
தவெக தரப்பில் 10 ஆயிரம் கூடுவார்கள் என்று தான் கடிதம் கொடுக்கப்பட்டது. அதன்படி ஒரு எஸ்பி, ஒரு டிஎஸ்பி, 20 இன்ஸ்பெக்டர்கள்… என 606 போலீசார் நிறுத்தப்பட்டனர். ஆனால் தவெக தலைவர் ஒரு பிரபலமான நடிகர் என்பதால், கூட்டம் பெருகத் தொடங்கியது, அவர் 7 மணிக்கு வந்தபோது, ஏற்கனவே அவர்கள் நீரிழப்புக்கு ஆளாகி, சரிந்து விழுந்தனர்.
மேலும், தேர்தல் பிரப்புரையின் போது ரவுடிகள் களமிறக்கப்பட்டார்கள். ஆளுங்கட்சியின் நபர்கள் களமிறக்கப்பட்டார்கள் என்று கூறுவதெல்லாம் ஏற்க முடியாது. இதற்கான எந்தவொரு ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை” என்று வாதிட்டார்.
தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். அதேபோல் தமிழக அரசுக்கு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.