செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்குவதில் எந்த தயக்கமும் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
பசும்பொன்னில் இன்று (அக்டோபர் 30) முத்து ராமலிங்க தேவரின் குருபூஜை கொண்டாடப்பட்டது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியினருடன் வந்து மரியாதை செலுத்தினார்.
அதே சமயம் அதிமுகவின் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாக வந்து முத்துராமலிங்க தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.
மூன்று பேரும் ஒன்றாக வந்தது தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
துரோகத்தை வீழ்த்துவதற்காக நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து தேர்தலை சந்திப்போம் என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்களே?
4 வருடமாக இதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இதையேத்தான் டிடிவி தினகரன் சொல்லி வருகிறார். சசிகலா அம்மா வந்தாரா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. இவர்கள் மூன்று பேரும் வந்ததாகத்தான் கேள்விபட்டேன். அதுவும் பார்க்கவில்லை. மூன்று பேரும் சந்தித்திருக்கிறார்கள். இது ஏற்கனவே போட்ட திட்டம் தான். அதிமுகவில் இருந்தபோது இந்த துரோகிகள் குழிபறித்த காரணத்தினால் தான் அதிமுகவால் வெற்றி பெறமுடியவில்லை.
இரண்டு நாளைக்கு முன்னதாக ஓபிஎஸ் என்ன சொன்னார். திமுகதான் ஆட்சிக்கு வரும் என்கிறார். இவரா அதிமுக காரர். இவரா ஒருங்கிணைக்கின்றவர். திமுகவின் பி டீம் -ஆக செயல்படுகிறார்கள்.
ஓபிஎஸ்-ஐ கட்சியை விட்டு நீக்கினீர்கள்.. செங்கோட்டையனை நீக்குவதில் என்ன தயக்கம்?
தயக்கம் ஒன்றும் இல்லை. அதிமுகவுக்கு துரோகம் செய்து, தலைமையின் கருத்தை கடைபிடிக்காவிட்டால் யாராக இருந்தாலும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சசிகலாவை மூன்று பேரும் சந்தித்திருக்கிறார்கள்?
அது சந்திக்கலாம்… அது அவர்களுடைய விருப்பம். என்ன கருத்து.. என்ன ஏதென்று எங்களுக்கு தெரியாது. எத்தனை எட்டப்பர்கள், துரோகிகள் வந்தாலும் எங்களை வீழ்த்த முடியாது.
மூன்று பேரும் ஒன்றிணைந்து வந்ததை எப்படி பார்க்கிறீர்கள்?
அது வீணாபோனது… பேசுவது வேஸ்ட்.
அதிமுக பலவீணமடையாதா? ஏற்கனவே தெற்கில் பலவீணமாக உள்ளதே?
எப்படி பலவீணமடையும்… பலவீணமாக இருக்கிறது என்று யார் சொன்னது. நீங்களாக கற்பனையாக பேசாதீர்கள். எல்லாம் முடிவு செய்வது மக்கள் தான். 2011-2021 வரை அதிமுக ஆட்சியில் இருந்ததே. அதை பற்றி பேசுகிறீர்களா… திமுக எத்தனை முறை தோல்வி அடைந்திருக்கிறது. அதை பற்றி பேசுகிறீர்களா.
ஆளும் கட்சியாக இருக்கும் போதும் சரி, எதிர்க்கட்சியாக இருக்கும் போதும் சரி அதிமுக மீது மட்டுமே விமர்சனம் வைக்கிறீர்கள்.
அந்தியூர் எல்லாம் அதிமுக கோட்டை. ஆனால் சுமார்1000 வாக்குகள் வித்தியாசத்தில் அங்கு தோற்றோம். இவர்கள் செய்த துரோகத்தால் தான் 2021ல் வெற்றி பெற முடியவில்லை. பயிர் செழித்து வளர வேண்டும் என்றால் களை எடுக்கப்பட வேண்டும்.
அதிமுக கோட்டையிலேயே செங்கோட்டையனால் ஒருமுறை ஜெயிக்க முடியவில்லை.
இவ்வாறு பதிலளித்தார்.
