மலையாளத் திரையுலகில் இன்றிருக்கிற இளம் நாயகர்களில் ‘ப்ளாக்பஸ்டர்’ வெற்றிகளையும் தோல்விகளையும் அடுத்தடுத்து தந்தவராக அறியப்படுபவர் நிவின் பாலி. ‘நேரம்’ படத்திற்கு முன் சுமார் பத்து படங்களில் சிறிய, குறிப்பிடத்தக்க பாத்திரங்களில் தோன்றியிருக்கிறார்.
ஆனால், அந்த படமே இவர் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சியது. தொடர்ந்து ‘1983’, ‘ஓம் சாந்தி ஒசன்னா’, ‘பெங்களூர் டேஸ்’, ’மிலி’, ‘வடக்கன் செல்ஃபி’, ‘பிரேமம்’, ‘ஆக்ஷன் ஹீரோ பிஜு’ என்று ‘வெரைட்டி’யாக படங்கள் தந்தார். nivin pauly says i dont know why i studied engineering

அதன்பிறகு ‘ஹே ஜுடு’, ‘காயம்குளம் கொச்சுண்ணி’, ’லவ் ஆக்ஷன் ட்ராமா’, ‘மூத்தோன்’, ‘துறமுகம்’ என்று வேறுபட்ட கதைகளில் நடித்தாலும், ‘வருஷங்களுக்கு சேஷம்’ படத்தில் கொஞ்சம் பெரிய ‘கேமியோ’வாக அமைந்த இவரது இருப்பே ‘கம்பேக்’ எனும் வகையில் அமைந்தது.
அஞ்சலி, சூரி மற்றும் இவரது நடிப்பில், இயக்குனர் ராம் ஆக்கிய ‘ஏழு கடல் ஏழு மலை’ நீண்ட காலமாகக் காத்திருப்பில் இருந்து வருகிறது. டியர் ஸ்டூடண்ட்ஸ், டால்பி தினேஷன் படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன. இது போக ‘பென்ஸ்’ஸில் வில்லனாக நடிக்கிறார் நிவின்.
மலையாளம் மட்டுமல்லாமல் தமிழிலும் குறிப்பிடத்தக்க அளவில் ரசிகர் ரசிகைகளைப் பெற்றவர். திடீரென்று உடல் பருமன் ஆன காரணத்திற்காக ‘பாடி ஷேமிங்’ பிரச்சனையை எதிர்கொண்டவர். இத்தனைக்கு மத்தியிலும் தனது நடிப்பில் இடைவெளி விழுந்துவிடாமல் பார்த்துக் கொள்வதே இவரது தன்னம்பிக்கையைக் காட்டும்.

சமீபத்தில் கொச்சியில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஸ்டார்ட் அப்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார் நிவின் பாலி. ‘இரும்பு அடிக்குற இடத்துல ஈக்கு என்ன வேலை’ என்பது போன்ற கமெண்ட்கள் வந்து விழுந்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன், தானும் ஒருகாலத்தில் ஸ்டார்ட்அப் தொடங்க ஆசைப்பட்டதாகச் சொல்லியிருக்கிறார்.
‘இன்ஜினியரிங் படிப்பை ஏன் படிச்சேன்னு அந்த காலகட்டத்துல என்னால ஒரு முடிவுக்கு வர முடியல’ என்று தெரிவித்திருக்கிறார்.
பொறியியல் கல்லூரியில் படிப்பு முடித்தவுடன், புதிதாக ஒரு வர்த்தக நிறுவனம் அல்லது ஸ்டார்ட்அப் தொடங்குவதே இவரது எண்ணமாக இருந்திருக்கிறது.
‘நண்பர்களா சேர்ந்து நிறைய டிஸ்கஸ் பண்ணாலும் ஒரு முடிவுக்கு வர முடியலை. அதற்குள் சினிமா உலகத்துல நுழைஞ்சிட்டேன். தொடர்ந்து படங்கள் நடிச்சதுல ஸ்டார்ட் அப் ஆசை அந்த இடத்துலயே நின்னுடுச்சு’ என்றிருக்கிறார்.
அதேநேரத்தில், இப்போது மீண்டும் ஸ்டார்ட் அப் தொடங்குகிற ஆசை துளிர்விட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார் நிவின் பாலி. ‘ஸ்டார்ட் அப்களுக்கான வளர்ச்சி இப்போ நல்லாவே இருக்கு. சினிமா துறையில இப்போ நிறைய சவால்கள் இருக்குது. ஏஐ மூலமாக சினிமா தயாரிப்புல நிறைய மாற்றங்களை செயல்படுத்த முடியும்’ என்று சொல்லியிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல், அடுத்து சினிமா, வர்த்தகம் என இரண்டு துறைகளிலும் தொடர்ந்து செயல்படப்போவதாக உறுதியளித்திருக்கிறாராம் நிவின் பாலி. nivin pauly says i dont know why i studied engineering