புவியின் மேற்பரப்பை ஆய்வு செய்ய நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளை சுமந்துக்கொண்டு ஜி .எஸ்.எல்.வி எப்-16 ராக்கெட் வெற்றிகரமாக இன்று (ஜூலை 30) விண்ணில் பாய்ந்தது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா உடன் இணைந்து காலநிலையால் ஏற்படும் புவியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காக நிசார் செய்ற்கைக்கோளை ரூ. 12,000 கோடி பொருட்செல்வில் உருவாக்கியது இஸ்ரோ.

இதனை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஜி .எஸ்.எல்.வி எப்-16 ராக்கெட் மூலம் ஏவுவதற்கான 27 மணி நேரம் 30 நிமிட கவுண்ட் டவுன் நேற்று தொடங்கியது.
தொடர்ந்து ராக்கெட்டின் செயல்பாட்டை இஸ்ரோ அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், சரியாக இன்று மாலை 5.40 மணிக்கு தீப்பிழம்பை கக்கியபடி வெற்றிகரமாக இன்று விண்ணில் பாய்ந்தது.
சீராக முன்னேறிய நிசார் செயற்கைக்கோள், புவியின் சுற்றுவட்டப்பாதையில் 743 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டதாகவும், இது அனைத்து காலநிலைகளிலும் புவியின் மாற்றங்கள் குறித்து துல்லிய தகவல்களைக் கொடுக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.