மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவையில் முதன் முறையாக பேசியது சர்ச்சையாகி உள்ளது.
மாநிலங்களவை எம்.பி.யாகி இருக்கும் கமல்ஹாசன் நேற்று பிப்ரவரி 4-ந் தேதி முதல் முறையாக பேசினார். அப்போது, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ் மொழியை இழிவாக பேசியதாக அவரது பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக சுட்டிக் காட்டினார் கமல்ஹாசன்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகம், “மாநிலங்களவையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ் மொழியைப் பற்றி இழிவான சொற்களைப் பயன்படுத்தியதாக கமல்ஹாசன் ஒரு தவறான தகவலைத் தெரிவித்துள்ளார். கடந்த 2025 மார்ச் மாதம் நடைபெற்ற நிகழ்வில், நிதியமைச்சர், ஈ.வெ. ராமசாமி நாயக்கர் கூற்றையே தெளிவாக மேற்கோள் காட்டினார்; அது அவருடைய சொந்தக் கருத்து அல்ல. இது குறித்த வீடியோ ஆதாரத்திற்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் பேசியது என்ன?
மாநிலங்களவையில் கமல்ஹாசன் பேசுகையில், எ”பிச்சைப் பாத்திரத்தில் இருந்து எடுத்த சில்லறைகள் நவீன காலத்துக்கு உதவாது என்று தெரிந்தவர் நீங்கள். நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகுதான் உங்கள் பிச்சை பாத்திரம் உருவாக்கப்பட்டது. பிச்சை குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழை, தமிழரை பார்த்து பிச்சை எடுக்கக்கூட தமிழ் உதவாது என்கிறீர்கள். ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே! தமிழ்… பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது” என்றார்.
தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது என்று 27 நவம்பர் 1943 அன்று வெளியான விடுதலை பத்திரிகையில் ஒருவர் (பெரியார்) கூறியிருப்பதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார என்பது குறிப்பிடத்தக்கது.
