கரூரில் கடந்த 27ம் தேதி விஜய்யின் தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று (செப்டம்பர் 29) மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் ஆகியோர் கரூர் வந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்தனர். இதைத்தொடர்ந்து பிற்பகலில் நிர்மலா சீதா ராமன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
“பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், என்னையும், அமைச்சர் எல்.முருகனையும் இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுமாறு அனுப்பி வைத்தனர்.
கரூர் வர பிரதமர் விருப்பப்பட்டாலும், வர முடியாத சூழலால் எங்களை அனுப்பி வைத்துள்ளார். நேற்று இரவு பிரதமர் அறிவுறுத்திய நிலையில் இன்று காலையிலேயே கரூர் வந்தடைந்தோம்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் துக்கத்தை வார்த்தைகளால் கூற முடியவில்லை. அவர்கள் பேசியதில் கலங்கினேன்.
வேதனையை கூறி அழுபவர்களிடம் ஆறுதல் கூற வார்த்தைகளே இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் கூறியதை பிரதமர் மோடியிடமும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் தெரிவிப்பேன்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்க மட்டுமே வந்துள்ளோம். மத்திய அரசு தரப்பில் வழங்கப்படும் நிவாரண நிதி, உடனடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அதற்கான விபரங்களை மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுள்ளோம். அடுத்த இரண்டு நாட்களில் அனுப்பி வைக்க நான் நடவடிக்கை எடுப்பேன்.
மத்திய அரசின் பிரதிநிதியாக நாங்கள் வந்துள்ளோம். கட்சி சார்பில் யாரையும் விமர்சிப்பதற்காக, குற்றம் சாட்டுவதற்காக வரவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் கூறியதை பிரதமரிடம் தெரிவிப்போம். யார் மீது தவறு என்பதை நிர்ணயிக்க எனக்கு அதிகாரம் இல்லை. கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும்” என தெரிவித்தார்.