அஜித்குமார் லாக்கப் மரணத்தில் புகார்தாரரான நிகிதாவின் குடும்பமே அரசு வேலை வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் பணம் மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். Nikitha Ajithkumar
சிவகங்கை மடப்புரம் அஜித்குமார், நகை திருட்டு புகாரில் போலீசார் நடத்திய விசாரணையில் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் அஜித்குமார் மீது சந்தேக புகார் கொடுத்த நிகிதா என்ற பெண் குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. 2011-ம் ஆண்டு ரூ16 லட்சம் மோசடி செய்ததாக நிகிதா, அவரது தாயார் மற்றும் உறவினர்கள் மீது மதுரை திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்ததும் அம்பலமானது.
இந்த நிலையில் நிகிதா குடும்பத்திடம் பணம் கொடுத்து ஏமாந்த ராஜங்கம் என்பவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், என்னுடைய பிஎட் மாணவிதான் நிகிதா. தற்போது பேராசிரியராக பணிபுரிகிறார். 2011-ல் ஆசிரியர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ16 லட்சம் மோசடி செய்தார் நிகிதா. நிகிதாவின் தாயார், அவரது உறவினர் ஜெயபெருமாள் உள்ளிட்டோர் இப்படி பலரிடமும் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கூட, நிகிதா குடும்பத்தினரிடம் மோசடி செய்த எங்களது பணத்தை திருப்பித் தர வேண்டும் என கேட்டோம். ஆனால் அப்போதும் எங்களை நிகிதா குடும்பம் மிரட்டியது. நிகிதாவால் பாதிக்கப்பட்ட எங்களுக்கும் நீதி வேண்டும் என்றார்.