அஜித்குமார் மரண வழக்கின் புகார்தாரர் நிகிதா மற்றும் அவரது குடும்பமே திருமண மோசடி செய்யும் கும்பல் என்று நிகிதாவின் முன்னாள் கணவரும்
தென்னிந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் நிறுவனருமான திருமாறன் ஜி தெரிவித்துள்ளார். Nikitha Thirumaran Ajithkumar
நிகிதா குறித்து செய்தியாளர்களிடம் திருமாறன் ஜி கூறியதாவது: நிகிதாவுக்கு தாலி கட்டிவிட்டதாலே என் மனைவியா? திருமணமான இரவே பால், பழம் சாப்பிடும் முன்பே மண்டபத்தை விட்டு ஓடிப் போனவர்தான் நிகிதா. 2004- ஆகஸ்ட் 29-ந் தேதிதான் திருமணம் நடந்தது. நாங்க விஐபி குடும்பம். எனக்கு கல்யாணம் செய்து வைத்தது இந்து முன்னணி ராமகோபாலன் ஜி.
நிகிதா, எதற்காக திருமணமான இரவே ஓடிப்போனார் என நாங்கள் விசாரித்த போது, நாய்க்கு சோறு வைக்கவில்லை என சண்டை போட்டார். என் தந்தை, தம்பி ஆகியோர் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை சொன்னார் நிகிதா. காவல்துறை, நீதிமன்றம் என அலைந்தோம்.. ஒருவழியாக ரூ10 லட்சம் என்னிடம் பெற்றுக் கொண்டுதான் விவகாரத்தே கொடுத்தார் நிகிதா. இப்படி பலபேரை ஏமாற்றியவர்கள்தான் நிகிதாவும் அவரது குடும்பத்தினரும். நிகிதாவின் அப்பா ஜெயபெருமாள் துணை ஆட்சியராக இருந்தவர். அவர்களுக்கு காவல்துறையின் முழு ஆதரவு இருக்கிறது.
நிகிதாவின் குடும்பத்தினரின் திருமண மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். திருமணங்களை செய்துவிட்டு அவர்களை காவல்துறை, நீதிமன்றம் என அலையவிட்டு அவர்களிடம் இருந்து ரூ10 லட்சம், ரூ20 லட்சம் பறித்துவிட்டு விவகாரத்து தருவதுதான் இந்த கும்பலின் வேலை. இதேபோல வேலை வாங்கித் தருவதாகவும் பலரிடம் மோசடி செய்திருக்கிறது இந்த கும்பல்.
நிகிதா தமது நகை காணாமல் போனதாக சொல்வது எல்லாம் பொய்யாகத்தான் இருக்கும். கோவிலில் காவலாளி அஜித்குமாருடன் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கும்.. அதற்காக அவர் மீது நகை திருட்டு பழியைப் போட்டிருப்பார்.. நிகிதா நகையை தொலைக்கக் கூடியவரும் அல்ல. அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதாவைத்தான் முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும். இவ்வாறு திருமாறன் கூறினார்.