முத்தரப்பு டி20 போட்டியில் கடைசி ஓவரில் 7 ரன்கள் கூட அடிக்க முடியாமல் தோற்று, நியூசிலாந்து அணியிடம் பட்டத்தை இழந்தது தென்னாப்பிரிக்கா அணி.
ஜிம்பாவே, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான முத்தரப்பு டி20 தொடர் ஜிம்பாவேயில் கடந்த 14 ஆம் தேதி தொடங்கியது.
இதில் முதல் இரண்டு இடங்களை பிடித்த நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் ஹராரே மைதானத்தில் நடந்த இறுதி போட்டியில் நேற்று மோதின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கான்வே மற்றும் ரச்சின் இருவரும் தலா 47 ரன்கள் குவித்தன.
தொடர்ந்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி அதிரடியாக விளையாடியது.
கடைசி ஓவரில் 7 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில், கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்தன. களத்தில் அதிரடி பேட்ஸ்மேன் பிரேவிஸ் மற்றும் லிண்டே ஆகியோர் இருந்தனர்.
கடைசி ஓவரை நியூசிலாந்து அணியின் மேட் ஹென்றி வீச வந்தார். முதல் பந்தை டாட் செய்த பிரேவிஸ் இரண்டாவது பந்தில் டீப் மிட் விக்கெட்டில் கேட்ச் கொடுத்து துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.
அடுத்து இறங்கிய போஸ்ச், 3வது பந்தில் 2 ரன்னும், 4வது பந்தில் 1 ரன்னும் அடித்தார்.
அடுத்த 2 பந்துகளில் 4 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில், லிண்டே விக்கெட்டை கைப்பற்றினார் ஹென்றி.
கடைசி பந்திலும் அவர் ரன் எதுவும் விட்டுக்கொடுக்காத நிலையில், நியூசிலாந்து அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது.
கடைசி ஓவரை சிறப்பாக வீசி 2 விக்கெட்டுகள் வீழ்த்திய மேட் ஹென்றி ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பெற்றார்.