முனைவர் – டி.ரவிக்குமார்
யுஜிசி, ஏ.ஐ.சி.டி.இ முதலான உயர் கல்விக்கான ஒன்றிய அரசின் அமைப்புகளையெல்லாம் ஒருங்கிணைத்து ‘விக்சித் பாரத் சிக்க்ஷா ஆதிஷ்டான்’ என்ற ஒரே அமைப்பை உருவாக்குவதற்கான சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவையில் 2025 டிசம்பர் 15 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அது கூட்டுப் பாராளுமன்றக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள இந்த மசோதா உயர்கல்விக்கான ஒரு ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த சட்ட மசோதா தற்போதுள்ள (i) பல்கலைக்கழக மானியக் குழு (UGC),
(ii) அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE), மற்றும்
(iii) தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (NCTE) ஆகியவற்றை உருவாக்கிய மூன்று சட்டங்களையும் ரத்து செய்கிறது.
சட்டக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி இந்த மசோதாவின் வரம்பிற்கு இல்லை. அவை தனித்தனி சட்டங்களின் கீழ் தொடர்ந்து செயல்படும்.
இந்த சட்ட மசோதாவின்படி ‘விக்சித் பாரத் சிக்க்ஷா ஆதிஷ்டான்’ என்ற ஆணையம் நிறுவப்படும்.
ஆணையத்தின் கீழ் பின்வரும் மூன்று கவுன்சில்கள் செயல்படும்:
(i) ஒழுங்குமுறை கவுன்சில் – உயர்கல்விக்கான பொதுவான ஒழுங்குபடுத்துநராக செயல்படும்,
(ii) அங்கீகார கவுன்சில் – அங்கீகார முறையை மேற்பார்வை செய்யும்,
(iii) தரநிலைகள் கவுன்சில் – கல்வித் தரநிலைகளை நிர்ணயிக்கும்.
இந்த ஆணையம் பின்வரும் பணிகளைச் செய்யும்
(i) உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு மூலோபாய திசையை நிர்ணயித்தல்,
(ii) உயர்கல்வி நிறுவனங்களை (HEIs) பெரிய, பல்துறை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களாக மாற்றுவதற்கான வழிகாட்டி வரைபடத்தை உருவாக்குதல்,
(iii) கல்வித் தரத்தை மேம்படுத்தும் திட்டங்களைப் பரிந்துரைத்தல்.
கவுன்சில்களுக்கிடையே ஒருங்கிணைப்பை உறுதிசெய்தல், கவுன்சில்களின் சீரான செயல்பாட்டிற்காக நிதி ஆதரவு வழங்குதல் ஆகியவற்றை ஆணையம் செய்யும்.
தற்போது, பல்ககைக் கழக மானியக் குழுவே ( யுஜிசி) பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு மானியங்களை ஒதுக்குகிறது. ஆனால் இந்த மசோதாவின் கீழ் நிறுவப்படும் ஆணையத்திற்கோ அதன் கவுன்சில்களுக்கோ நிதி ஒதுக்கீடு தொடர்பான அதிகாரங்கள் இருக்காது.
ஒவ்வொரு கவுன்சிலும் ஒரு தலைவர் (President) தலைமையில், அதிகபட்சம் 14 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். தலைவர்கள் உயர்கல்வி அல்லது ஆராய்ச்சி துறையில் சிறப்பான, மதிப்புள்ள நபர்களாக இருக்க வேண்டும்; அவர்களுக்குப் பேராசிரியர் நிலைக்கு இணையான குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.
கல்வித்துறை சார்ந்த நிபுணர்கள், ஒன்றிய அரசின் உயர்கல்வித் துறையின் ஒரு நியமன உறுப்பினர், மற்றும் மற்ற இரண்டு கவுன்சில்களால் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் ஒவ்வொரு கவுன்சிலிலும் இடம்பெறுவர். ஒழுங்குமுறை கவுன்சிலும் தரநிலைகள் கவுன்சிலும் மாநில அரசுகளின் ஒரு நியமன உறுப்பினரை மாறிமாறிக் (rotation) கொண்டிருக்கும்.
கவுன்சில்களின் தலைவர்களும் முழுநேர உறுப்பினர்களும், தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவர். இந்தக் குழுவில் இரண்டு சிறப்பு நிபுணர்கள் மற்றும் மத்திய அரசின் உயர்கல்வித் துறைச் செயலாளர் இடம்பெறுவர். சிறப்பு நிபுணர்களில் ஒருவர் குழுவின் தலைவராக இருப்பார்.

ஆணையத்தில் ஒரு தலைவர் (Chairperson) மற்றும் 12 உறுப்பினர்கள் இருப்பர். தலைவர் சிறப்பு மிக்கவராக புகழ்பெற்ற நபராக இருப்பார். அவர் கௌரவ அடிப்படையில் (honorary capacity) அப்பதவிக்கு நியமிக்கப்படுவர்.
ஆணையத்தின் உறுப்பினர்களாகப் பின்வருவோர் இருப்பார்கள்:
(i) மூன்று கவுன்சில்களின் தலைவர்கள்,
(ii) மத்திய அரசின் உயர்கல்வித் துறைச் செயலாளர்,
(iii) ஐந்து சிறப்பு நிபுணர்கள்,
(iv) மாநில உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த இரண்டு சிறப்பு கல்வியாளர்கள் ஆகியோர் அடங்குவர்.
தலைவரும் உறுப்பினர்களும் ஒன்றிய அரசின் பரிந்துரையின் பேரில் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவர்.
ஆணையத் தலைவரும் கவுன்சில் தலைவர்களும் ஆரம்பத்தில் மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுவர்; அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம். ஆணையம் மற்றும் கவுன்சில்களின் பிற உறுப்பினர்கள் மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுவர். அனைவரும் மேலும் ஒரு முறை மறுநியமனம் பெறத் தகுதியுடையவர்கள்.
ஆணையத் தலைவரைத் தவிர மற்ற அனைவருக்கும் 70 வயது வரம்பு பொருந்தும். ஒழுங்குமுறை மற்றும் தரநிலைகள் கவுன்சில்களில் மாநில அரசுகளின் நியமன உறுப்பினர்கள் ஒரு ஆண்டு காலத்துக்கு நியமிக்கப்படுவர். ஊதியம், படிகள் மற்றும் பிற பணி நிபந்தனைகளை ஒன்றிய அரசு நிர்ணயிக்கும்.
இந்த சட்ட மசோதாவானது , 2018 ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்ட இதேபோன்ற மசோதாவின் மறுவடிவம்தான் என்பதை பொதுமக்களுக்கு நினைவூட்டுவது அவசியம். இப்போது, ஆணையத்துக்கும் அதன் கீழுள்ள கவுன்சில்களுக்கும் இந்தி / சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்துள்ளனர்.
2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட உயர்கல்விக்கான சட்ட மசோதாவுக்கு குடிமக்கள், மாணவர்–ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலானவர்களிடமிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கண்டனக் கடிதங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அதன் காரணமாக, அன்றைய பாஜக கூட்டணி அரசு அந்த மசோதாவைக் கைவிட்டுவிட்டது. ஏழு ஆண்டுகள் கடந்தபின் அதே மசோதாவை இப்போது மீண்டும் கொண்டு வந்துள்ளனர்.
இந்த சட்ட மசோதாவைப் பார்க்கும்போது பின்வரும் கவலைகள் எழுகின்றன:
- புதிதாக அமைக்கப்படும் ஆணையத்தின் கீழுள்ள எந்தக் கவுன்சிலுக்கும் நிதியளிப்பதற்கான பொறுப்பு வழங்கப்படவில்லை. இந்த சட்ட மசோதா, மானியங்கள் வழங்கும் பொறுப்பை கல்வி அமைச்சகத்திடம் (MoE) ஒப்படைக்கிறது. இதனால் மானிய ஒதுக்கீடென்பது அதிகாரத்துவமானதாகவும், தன்னிச்சையானதாகவும், அரசியல் கணக்கீடுகளுக்குட்பட்டதாகவும் மாறும். ஏற்கனவே இந்தியைப் பயிற்றுமொழியாக ஏற்காத மாநிலங்களுக்கு பள்ளிக் கல்விக்கான நிதியை பாஜக அரசு விடுவிக்க மறுத்துவருகிறது. இனி உயர்கல்விக்கும் அந்த கதிதான் ஏற்படும்.
- உயர்கல்வியென்பது அரசமைப்புச் சட்டத்தின் ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளது. அதை இந்த மசோதா முழுமையாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுசெல்கிறது. ஆணையத்தின் 12 உறுப்பினர்களில் 10 பேர் நேரடியாக ஒன்றிய அரசால் நியமிக்கப்படுவார்கள். அவர்களில் ஆசிரியர்கள் இருவர் மட்டும்தான் இருப்பார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாநில உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த இந்த இரு ஆசிரியர் பிரதிநிதிகளும் ‘ஒன்றிய அரசால் நியமிக்கப்படுவார்கள்’ என்பதால், அவை அரசியல் நியமனங்களாக மாறும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி ஆணையத்தின் அமைப்பு பன்மைத் தன்மையைப் பிரதிபலிக்கவில்லை; பட்டியல் சாதிகள் (SC), பட்டியல் பழங்குடிகள் (ST), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் (OBC), பெண்கள், மாற்றுப்பாலினத்தவர்கள், மாற்றுத் திறனாளிகள், சிறுபான்மையினர் ஆகியோருக்கு எந்தப் பிரதிநிதித்துவமும் இதில் வழங்கப்படவில்லை.

அங்கீகாரம் வழங்குதல், நிறுவனங்களை மூட உத்தரவிடுதல் போன்ற ஒழுங்குமுறை விதிகள், அதை ஒரு அதிகாரத்துவ அமைப்பாக மாற்றும். இதனால் ஆசிரியர்களுக்கான வேலைப் பாதுகாப்புக் குறையும், கட்டணங்கள் கடுமையாக உயரும்.
இந்த மசோதா உயர்கல்வி நிறுவனங்களின் தன்னாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. ஆணையம் உருவாக்கும் ஒவ்வொரு தரநிலை ஒழுங்குமுறைக்கும் ஒன்றிய அரசின் முன்அனுமதி அவசியம். இது ஒத்திசைவுப் பட்டியலில் (Concurrent List) உள்ள நிலையை மீறுவதோடு, மாநில அரசுகள் நடத்தும் பெரும்பான்மையான உயர்கல்வி நிறுவனங்களுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே மோதலும் முரண்பாடும் ஏற்படச் செய்யும்.
சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் அரசு நிதியின் மூலம் உயர்கல்வி மேம்படுத்தப்பட்டது. அந்தச் சிறப்புமிக்கப் பணி, சமூகத்தின் பல்வேறு குழுக்களுக்கிடையே சமத்துவத்தை அதிகரிக்கச் செய்யவும், முற்போக்கான சமூக–பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தது. ஆனால் இந்த சட்ட மசோதாவோ அதிகார மையப்படுத்தலையும், வணிகமயமாதலையும், தனியார்மயமாதலையும் ஊக்குவிப்பதாக உள்ளது. இந்த மசோதா சட்டம் ஆகிவிடாமல் தடுப்பது மட்டுமின்றி கல்வியை மாநிலப்பட்டியலின்கீழ் கொண்டுவருவதற்கான போராட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டியது நமது கடமையாகும்.
கட்டுரையாளர்

முனைவர் டி.ரவிக்குமார் – கவிஞர், மொழிபெயர்ப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர். கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு, விமர்சனம் என 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
