புதிய வருமான வரி மசோதாவை திரும்ப பெறுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வருமான வரிச் சட்டம் 1961ல் இயற்றப்பட்டது. இதில் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி மக்களவையில் புதிய வருமான வரி மசோதாவை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மசோதா பாஜக எம்.பி பைஜெயந்த் தலைமையிலான தேர்வு குழுவுக்கு அனுப்பப்பட்டது.
தேர்வு குழு தனது பரிந்துரையை கடந்த ஜூலை 21 அன்று மக்களவையில் சமர்ப்பித்தது.
இந்த சூழலில் தேர்வு குழுவின் பரிந்துரையை ஏற்று புதிய வருமான வரி மசோதாவை திரும்ப பெறுவதாக இன்று (ஆகஸ்ட் 8) மக்களவையில் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
தேர்வு குழுவின் அனைத்து பரிந்துரைகளும் அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
வரைவின் தன்மை, சொற்றொடர்களின் சீரமைப்பு, அதன் விளைவாக ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாக கூறி இந்த மசோதாவை திரும்ப பெற்றுள்ளது மத்திய அரசு.
புதிய திருத்தப்பட்ட வருமான வரி மசோதா ஆகஸ்ட் 11ஆம் தேதி தாக்கல் செய்யவும் திட்டமிட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.