திருநெல்வேலியில் ஜாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட ஐடி பணியாளர் கவின் (Nellai Kavin Murder Case) உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஐடி பணியாளர் கவின், வேறு ஜாதி பெண்ணை காதலித்தார் என்பதற்காக அப்பெண்ணின் தம்பியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கவினை படுகொலை செய்த சுர்ஜித், போலீசில் சரணடைந்தார். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

இந்த வழக்கில் சுர்ஜித்தின் பெற்றோரான சப் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி இருவரையும் கைது செய்யும் வரை கவின் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சுர்ஜித்தின் தந்தை சப் இன்ஸ்பெக்டர் சரவணன் நேற்று ஜூலை 30-ந் தேதி இரவு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இருப்பினும் சுர்ஜித்தின் தாய் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாரியையும் கைது செய்ய வேண்டும் என்பது கவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை. இதனால் கவின் உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த படுகொலை வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.