நெல்லையை அதிரவைத்த ஐடி ஊழியர் கவின்குமார் ஜாதி ஆணவப் படுகொலை (Nellai Honour Killing) சம்பவத்தில் போலீஸ் தம்பதியினரின் மகன் சுர்ஜித் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த போலீஸ் தம்பதியினரான சரவணன்- கிருஷ்ணகுமாரிக்கு மகன், மகள் உள்ளனர்.

இந்த போலீஸ் தம்பதியினர் மகளை ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த ஐடி ஊழியரான கவின்குமார் காதலித்து வந்தார். இருவரும் வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் போலீஸ் தம்பதி குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் தாத்தா செல்லத்துரையை பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு அழைத்து வந்தார் கவின்குமார். சிகிச்சை முடிந்த பின்னர் ஊருக்கு செல்வதற்காக கவின்குமார், மருத்துவமனையை விட்டு வெளியே வந்தார். அப்போது, போலீஸ் தம்பதியின் மகன் சுர்ஜித், கவின்குமாரை அழைத்து பேசியிருக்கிறார். இந்த பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறிய நிலையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால், கவின்குமாரை சுர்ஜித் சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே கவின்குமார் துடிதுடித்து உயிரிழந்தார்.
சிசிடிவி கேமரா பதிவுகள் மூலமாக கவின்குமாரை வெட்டி படுகொலை செய்தது போலீஸ் தம்பதி மகன் சுர்ஜித் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுர்ஜித் கைது செய்யப்பட்டார். இந்த ஜாதி ஆணவப் படுகொலை சம்பவம் நெல்லையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.