“டாக்டர் ஆகணும்னு ஆசை மட்டும் இருந்தா போதாது… டாக்குமெண்ட்ஸ் எல்லாம் பக்காவா இருக்கணும்!” நீட் 2026 தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு ஒரு முக்கியமான ‘அலர்ட்’ வந்தாச்சு. தேசியத் தேர்வு முகமை (NTA) நேற்று (ஜனவரி 5) ஒரு அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது. “படிக்கிறது அப்புறம், முதல்ல உங்க ஆதார் கார்டை கையில் எடுங்க” என்பதுதான் அந்த உத்தரவின் சாராம்சம்!
என்ன அவசரம்? என்டிஏ உத்தரவு என்ன?
நீட் 2026 விண்ணப்பப் பதிவு வரும் பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாகவே, மாணவர்கள் சில முக்கிய ஆவணங்களைச் சரிபார்த்து, புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று என்டிஏ அறிவுறுத்தியுள்ளது. கடைசி நேரத்தில் சர்வர் பிஸியாகும், பதற்றம் வரும் என்பதால் இப்போதே வார்னிங் பெல் அடித்துள்ளனர்.
ஆதார் கார்டு (Aadhaar Card) – இதுதான் மெயின்!
விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் கட்டாயம். உங்கள் ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் அனைத்தும் துல்லியமாக இருக்க வேண்டும்.
- பெயர் (Name): 10ஆம் வகுப்பு மார்க்ஷீட்டில் இருப்பது போலவே ஆதாரிலும் பெயர் இருக்க வேண்டும். இனிஷியல் முன்னாடியோ, பின்னாடியோ மாறி இருந்தால் கூட சிக்கல்தான்.
- பிறந்த தேதி & பாலினம்: இது சரியாக இருக்கிறதா என்று செக் பண்ணுங்க.
- புகைப்படம் (Photo): சிறு வயதில் எடுத்த போட்டோ ஆதாரில் இருந்தால், உடனே இ-சேவை மையம் சென்று லேட்டஸ்ட் போட்டோவை அப்டேட் செய்யுங்கள்.
- பயோமெட்ரிக் & முகவரி: இதுவும் அப்டேட்டாக இருக்க வேண்டும்.
சாதிச் சான்றிதழ் (Category Certificate):
நீங்கள் இடஒதுக்கீடு (Reservation) கோருபவர் என்றால், உங்களிடம் உள்ள சான்றிதழ் செல்லுபடியாகக்கூடியதா (Valid) என்று பாருங்கள்.
- எஸ்சி (SC), எஸ்டி (ST), ஓபிசி (OBC-NCL) மற்றும் இடபிள்யுஎஸ் (EWS) பிரிவினர், அரசு விதிகளின்படி புதுப்பிக்கப்பட்ட சான்றிதழைக் கையில் வைத்திருக்க வேண்டும். பழைய சர்டிஃபிகேட் இருந்தால் இப்போதே புதியதற்கு அப்ளை பண்ணிடுங்க.
மாற்றுத்திறனாளிகள் அட்டை (UDID Card):
மாற்றுத்திறனாளிகள் (PwD) பிரிவில் விண்ணப்பிப்பவர்கள், தங்களுடைய UDID கார்டு காலாவதியாகாமல் (Renewed) உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
தேர்வு எப்போது?
நீட் 2026 தேர்வு வரும் மே மாதம் 3ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வ தேதி வரவில்லை என்றாலும், இதுதான் உத்தேசத் தேதி. விண்ணப்பப் பதிவு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளது.
கடைசி நேரத்துல ‘ஐயோ பெயர் தப்பா இருக்கே’னு அலைஞ்சா படிப்பு கெட்டுப்போயிடும்!
- மொபைல் நம்பர்: உங்கள் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர் (Mobile Number) பயன்பாட்டில் உள்ளதா என்று பாருங்கள். ஓடிபி (OTP) அதற்குத்தான் வரும்.
- ஸ்பெல்லிங் செக்: ஆதார், மார்க்ஷீட், கம்யூனிட்டி சர்டிஃபிகேட் – இந்த மூன்றிலும் உங்கள் பெயரின் ஸ்பெல்லிங் ஒரே மாதிரி இருக்க வேண்டும்.
- இன்றே செல்லுங்கள்: ஆதார் அப்டேட் ஆகச் சில நாட்கள் ஆகும். அதனால், நோட்டிபிகேஷன் வருவதற்கு முன்பே, இன்றே அருகிலுள்ள ஆதார் மையத்திற்குச் சென்று சரிபார்த்துவிடுங்கள்.
மேலும் விவரங்களுக்கு neet.nta.nic.in என்ற இணையதளத்தை மட்டுமே நம்புங்கள்.
