“நீட் பிஜி (NEET PG) எக்ஸாம் எழுதிட்டு, மார்க் கொஞ்சம் குறைஞ்சிருச்சே… இந்த வருஷம் எம்.டி (MD) சீட் கிடைக்குமா?” என்று நகத்தைக் கடித்துக் கொண்டிருந்த இளம் மருத்துவர்களுக்கு, டெல்லியில் இருந்து ஒரு ‘ஜில்’ செய்தி வந்திருக்கிறது.
இரண்டாம் கட்டக் கலந்தாய்வு முடிந்துவிட்டது. ஆனாலும், நாடு முழுவதும் சுமார் 18,000க்கும் மேற்பட்ட மருத்துவ மேற்படிப்பு இடங்கள் காலியாகவே கிடக்கின்றன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதை நிரப்ப மத்திய அரசு இப்போது ‘பிளான் பி’-யைக் கையில் எடுத்துள்ளது.
என்ன நடக்கிறது? வழக்கமாக இரண்டாவது ரவுண்ட் முடிவதற்குள் பெரும்பாலான கவர்மெண்ட் மற்றும் முக்கியப் தனியார் கல்லூரி இடங்கள் நிரம்பிவிடும். ஆனால், இந்த முறை கதை வேறு. இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இடங்கள் காலியாக இருப்பதால், அவற்றை வீணாக்கக் கூடாது என்பதற்காகத் தகுதி மதிப்பெண்ணைக் (Cut-off Percentile) குறைக்க மத்திய சுகாதார அமைச்சகம் பச்சைக் கொடி காட்டியுள்ளது.
எவ்வளவு குறையும்? இதற்கு முன்பு நடந்த கலந்தாய்வுகளில் கட்-ஆஃப் குறைக்கப்பட்டது போலவே, இம்முறையும் கணிசமாகக் குறைக்கப்பட வாய்ப்புள்ளது.
இதனால், இதுவரை ‘தகுதியற்றவர்’ (Not Eligible) என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள், இப்போது போட்டிக்குள் நுழைய முடியும். குறிப்பாக, பிரைவேட் காலேஜ் ஃபீஸ் கட்ட முடியாமல், அரசு இடத்திற்காகக் காத்திருக்கும் நடுத்தர வர்க்க மாணவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
அடுத்து என்ன? கட்-ஆஃப் குறைப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தேசியத் தேர்வு வாரியம் (NBE) மற்றும் மருத்துவக் கலந்தாய்வுக் குழு (MCC) மிக விரைவில் வெளியிடும். அதன்பிறகு, விடுபட்ட இடங்களுக்கான ‘மாப்-அப்’ (Mop-up) அல்லது ‘ஸ்ட்ரே வேகன்சி’ (Stray Vacancy) சுற்றுகள் நடைபெறும்.
டாக்டர் தம்பிகளே, தங்கச்சிகளே… கட்-ஆஃப் குறையுறது ஒரு பக்கம் இருக்கட்டும். முக்கியமா ‘சாய்ஸ் ஃபில்லிங்’ (Choice Filling) பண்றப்போ கொஞ்சம் உஷாரா இருங்க. ‘எனக்கு ரேடியாலஜி தான் வேணும், டெர்மட்டாலஜி தான் வேணும்’னு ஒற்றைக் காலில் நிற்காமல், இருக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திச் சிறந்த கிளினிக்கல் அல்லது பாரா கிளினிக்கல் படிப்புகளைத் தேர்வு செய்வது புத்திசாலித்தனம். இந்த 18,000 சீட்ல ஒரு சீட் உங்களோடது!
