ADVERTISEMENT

அகதிகள் மனங்களும் பண்பாட்டு அசைவுகளும்: “நெடிய பனைகள்”- ஓர் வாசிப்பு அனுபவம்

Published On:

| By Mathi

Book Review

பேரா. நா. மணி

“முப்பது பேரை ஏற்றிக் கொண்டு செல்ல வேண்டிய மோட்டார் படகு 63 பேரை ஏற்றிக் கொண்டு மன்னாரிலிருந்து தனுஷ்கோடி புறப்பட்டது.” என்ற நாவலின் முதல் வரியே நெஞ்சில் படபடப்பை உருவாக்கி விடுகிறது. அடுத்து, “மண்டபத்தில் வாழும் மக்கள் உயிர் இருந்தும் உயிரற்றவர்களாக இருந்தனர்.” “இலங்கையிலோ ஒவ்வொரு வீதியிலும் உயிரின் பயம்.” “எந்த வீதியில் எந்த முகமூடி அணிந்தவன் நிற்கிறானோ? அவன் தலை அசைவைப் பொறுத்து நம் தலை தப்புவது இருக்கிறது.” என அடுத்து வரும் வரிகள் நம்மை நாவலுக்குள் சுருட்டி இழுத்துக் கொள்கின்றன. கதை வாசகனை தரதரவென இழுத்துச் செல்கிறது. நாவலைப் படித்து முடித்த பிறகும் வாசகன் அதிலிருந்து வெளிவர முடியாதபடி கட்டிப் போடுகிறது. இலங்கையின் தமிழ் மண் முதலில் இரத்தத்தில் நனைகிறது. பின்னர் அகதிகளாக செல்லும் இடமெல்லாம் கண்ணீர் நிறைகிறது. அகதிகளின் கண்களில் இருந்து வரும் கண்ணீர் நம் நெஞ்சத்தையும் கரைக்கிறது. அகதியானவர்களின் அகம், புறம் இரண்டையும் எழுத்துப் படிமமாக, காட்சிப் படிமமாக புரிந்துகொள்ளத் தக்கதாக ஜீவகுமாரனின் எழுத்து வடிவெடுத்துள்ளது.

ADVERTISEMENT

முதலில் உயிர் பிழைத்தால் போதும் என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடுகிறோம். உயிர் பிழைத்த பின்னர், உயிருக்குள் உட்கார்ந்து கொண்டிருக்கும் உணர்வுகள் சிலிர்த்து எழுந்து விடுகின்றன. நமது உணர்வுகள் பண்பாட்டு விழுமியங்களில் வேர் பதித்து நிற்கின்றன. ஆயிரம் ஆண்டுகளாக உணர்வுகளில் வேர் பதித்து வாழ்கின்றன பண்பாட்டு விழுமியங்கள். சில நேரங்களில் உயிரைவிட பண்பாட்டு விழுமியங்களே மேலானதாகக் கருதப்படுகின்றன. உயிருக்கு உணவு, உடை, தங்குமிடமும் கிடைத்த பின்னர் உணர்வுகள் நம்மை ஆட்கொண்டு விடுகின்றன. அறிவை ஆளுமை செய்யும் அசுர பலமும் பண்பாட்டு விழுமியங்களுக்கு கிடைத்து விடுகிறது. வாழ்வையும் பண்பாட்டு விழுமியங்களையும் பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு அவை வாழ்வோடு பின்னிப் பிணைந்து விடுகின்றன. பண்பாட்டு விழுமியங்களை காக்கவே வாழ்கிறோம் என்பது வாழ்வின் பற்றுக் கோடாக மாறிவிடுகிறது. அதற்குள் சுகம் இருக்கிறது. மகிழ்ச்சி இருக்கிறது. நிம்மதி இருக்கிறது. பெருமிதம் இருக்கிறது.

இவையெல்லாம் ஏதும் தெரியாமல், ஆனால் இவையெல்லாவற்றையும் வாழ்வோடு இணைத்து வடிவாக வாழ்ந்து வந்தது தங்கம்மா இராசையா குடும்பம். போரால் சின்னாபின்னமாகிவிட்ட குடும்பங்களில் ஒன்று தங்கம்மா இராசையா குடும்பம். பெயருக்கே இது ஒரு குடும்பம். இந்த குடும்பமும் ஒரு குறியீடே என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இது போல் ஆயிரமாயிரம் குடும்பங்கள். அதன் ஓலத்தை தங்கம்மா இராசையா குடும்பத்தை முன்நிறுத்தி ஓர் இலக்கிய வடிவம் தருகிறார் ஜீவகுமாரன்.

ADVERTISEMENT

தங்கம்மா என்ற தலைமகளின் நிறைவான, நிம்மதியான குடும்பத்தில் பிறந்தவள் வதினி. இலங்கையில் பற்றி எரிந்த தீயும் எறிந்த குண்டுகளும் வதினியையும் சிவராஜாவையும் நார்வே நாட்டிற்கு தூக்கி வீசுகின்றன. அகதிகள் படும் அக, புற கஷ்டங்களைத் தாண்டி, வதினியும் சிவராஜாவும் வேணி என்ற ஒற்றை மகளோடு பெருவாழ்வு வாழும் பாக்கியம் பெறுகின்றனர். தனக்குக் கிடைத்த வாழ்வை தனது பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டு அழகுபடுத்திப் பார்க்க விரும்புகிறாள் வதினி. இது பண்பாட்டு மோதல்களமே — வதினியின் நார்வே வாழ்க்கை.

தங்கம்மாவின் இரண்டாவது மகள் கோமதியின் வழியே அகதி வாழ்வின் வேறொரு பரிமாணத்தை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார் ஜீவகுமாரன். கோமதி சுட்டிப் பெண்ணா? சூட்டிகையான பெண்ணா? அறிவாற்றல் நிறைந்தவளா? முறத்தில் புலியை, தமிழ் மங்கையை நினைவூட்டுபவளா? கருணையே வடிவான மதர் தெரேசாவா? எல்லாம் கலந்து கலவை அவள். அவளுக்கு வாய்த்த வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறாள்? ஏற்றம் பெறுகிறாள். ஏணியாக வாழ்கிறாள் — என்பதே இரண்டாவது சாரம்.

ADVERTISEMENT

நாவலின் அவலச் சுவை நிறைந்த பாத்திரம் விமலன். அறிவில், சிந்தனையில், செயலில் தற்கால இளைஞர்களின் முன்னுதாரணம். அகதி என்ற ஒரு காரணம். இத்தனைக்கும் இந்தியாவில் அகதி. தமிழ்நாட்டில் உள்ள நம்மில் பலர் அகதிகளின் முகமைக் கண்டு மட்டுமே சப்புக் கொட்டி இருப்போம். அகதிகள் வாழ்வு, அவர்களில் பலருக்கு கொடுக்கப்பட்டுள்ள இடம், அவர்கள் நொறுங்கிப் போகும் தருணங்கள் நாம் அறியாதவை. எத்தனை இருந்தாலும், “இந்தியா எங்கள் இரவல் தாய்நாடு” என்று நெஞ்சு நிமிர்த்திக் கூறவும், வாழவும் வைக்கும் இடமாக இந்தியா இருக்கிறது என்பதை பேசும் பாத்திரப் படைப்பு சகானா.

தங்கம்மாவும் இன்னும் அநேக தாய்மார்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடத்தி வரும் பண்பாட்டு பாரம்பரியத்தின் கொழுப் பொம்மையாக பாவிக்கப்படும் பாத்திரம் வேணி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, வேணி “ஆளாகி விட்டாள். பெரிய மனுஷி ஆகிவிட்டாள். வயதுக்கு வந்து விட்டாள்…” என்று எந்தச் சொல்லில் அழைத்தாலும் அதுவே அபசகுணம். பெண்னை சிறுமைப்படுத்தும் பேதமை, மனித மாண்புகளுக்கு எதிரான செயல் — என்ற நார்வே கலாச்சாரத்தை சுவாசித்து வளர்ந்து வருபவள். இலங்கையிலிருந்து நார்வே சென்று படையெடுக்கும் பண்பாட்டு படையெடுப்பை நார்வே மண்ணின் மாண்பு எப்படி எதிர்கொள்கிறது என்ற சித்திரம் அது.

இப்படித்தான் இந்தப் பெருங்கதையை புரிந்துகொள்ள முடிகிறது. அகதிகளின் அவலக் குரலை ஓர் காவியக் குரலாக மாற்றுவதில் ஜீவகுமாரன் வெற்றி கண்டிருக்கிறார். அவரது “நெடிய பனைகள்” வெறும் நாவல் அல்ல — அது யாழ்ப்பாணத்தின் வேரிழந்த மனிதர்களின் இரத்தச் சுவடுகளால் எழுதப்பட்ட ஒரு இனத்தின் வரலாற்று ஆவணம். பனைமரம் போல வறண்ட மண்ணில் வேரூன்றி வானைத் தொடும் உறுதியோடு நிற்கும் வாழ்க்கை சிதைந்து சின்னமாகி, மீண்டும் நிமிர்ந்து நிற்பதை காட்டும் காவியம். “பனையின் எந்தப் பாகமும் பயனற்றதல்ல” என்ற முதல் வரிகள், ஓர் உவமையாகக் கண்முன் நிற்கின்றன. தங்கம்மா இராசையாவின் குடும்பத்தில் ஒரு பிள்ளையும் வீணாகிப் போகவில்லை. ஒரு தந்தையின் உறுதி, ஒரு தாயின் தியாகம், ஒரு மகளின் கனவு — இவை அனைத்தும் நாவலில் மனிதத்தின் நிலைத்தன்மையை காட்டுகின்றன.
எழுத்தாளர் ஒவ்வொரு உரையாடலிலும், ஒவ்வொரு சிறு நிகழ்விலும் ஒரு முழு சமுதாயத்தின் மனவியல் நிலையை வெளிப்படுத்துகிறார்.

வெளிநாட்டு நாகரிகங்களில் மனித விழுமியங்கள், ஜனநாயகம் புதைந்து கிடைப்பதாக சொல்லப்பட்டாலும், மனிதனை பொருளாதாரத்தின் கருவியாக மாற்றியிருப்பதை எழுத்தாளர் நுட்பமாக சித்தரிக்கிறார். “பணம், பணம், பணம் – அனைத்தும் அதுவே தீர்மானிக்கிறது.” இந்த வரிகளில் நவீன உலகின் நெறி நெருக்கடிகள் நம்மை நேரடியாகத் தாக்குகின்றன.

ஜீவகுமாரனின் எழுத்து முற்றிய பனைமரத்தின் சேவுக்கு ஒப்பானது. துளிரும் துயரும் ஒன்றாக அதில் துளிர்கின்றன. அவரது மொழி எளிமையானது, ஆனால் அதன் ஒலியில் வலியும் அம்மண்ணின் பெருமையுடன் கலந்து நிற்கின்றன.
அவரின் எழுத்து திரைக்காட்சிகளாக நம் கண்முன்பு விரிந்து, சினிமா போல நம்மை நுழைய வைக்கும் உண்மைத் தன்மை கொண்டது.

“நெடிய பனைகள்” – ஒரு மரபின் மறு வாசகம். நாவல் முடிந்த பிறகு வாசகனின் உள்ளத்தில் ஓர் இனிமையான நெருப்பு தங்குகிறது. அது பனையின் நிழலோ, அகதியின் நம்பிக்கையோ அல்ல — அது மனித குலத்தின் உயிர்மூச்சு. “நெடிய பனைகள்” அகதியின் கண்ணீரை அரசியலாக அல்ல, மனிதத்தின் நிழலாகப் படைக்கிறது.

அது யாழ்ப்பாணத்தின் வரலாற்றையும், தமிழினத்தின் மனஅழுத்தத்தையும், பெண்மையின் உள் சக்தியையும் ஒரே நேரத்தில் நமக்குக் காட்டுகிறது.
இந்த நாவல் யாழ் மண்ணின் பனைமரம் போலவே காலத்தால் காய்ந்துவிடாமல் நிமிர்ந்து நிற்கும். ஒருவேளை காய்ந்தாலும் நிமிர்ந்து நிற்கும்.

குறிப்பு: டென்மார்க் வி. ஜீவகுமாரனின் “நெடிய பனைகள்” இரா.செ. சுப்பையா நினைவு அறக்கட்டளை நடத்திய 2025 ஆம் ஆண்டு போட்டியில் வெற்றி பெற்று ரொக்கப் பரிசாக ரூபாய். 25,000 பரிசு பெற்ற நாவல். நாற்கரம் வெளியீடு.

கட்டுரையாளர்: நா.மணி கூடுதல் பேராசிரியர் ஜெயின் பல்கலைக்கழகம் பெங்களூரு.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share