தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்க்க வேண்டும் என்ற நோக்கம், விருப்பம் அவர்களுக்கு இருக்கிறது; ஆனால் தவெக தொண்டர்களுக்கு எந்த சலனமும் இல்லை என அக்கட்சியின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
தந்தி டிவி சேனலுக்கு நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: திமுக தேர்தலை சந்திக்கத் தயாராக இருப்பதாக அவர்கள் கருதிக் கொண்டாலும், அவர்களுடைய கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நிலைமை இன்னும் நீடிக்கிறது. வரலாற்றில் திமுக இந்தத் தேர்தலில்தான் 26 கட்சி கூட்டணி என்று அறிவித்திருக்கிறார்கள். தமிழக வெற்றிக் கழகத்தினுடைய வருகையும், வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய்க்கு மக்கள் மத்தியில் கிடைக்கிற வரவேற்பும் திமுகவை இந்த முடிவு எடுக்கத் தூண்டியிருக்கிறது. 26 கட்சிகளை கூட்டணியில் சேர்த்து பேச்சுவார்த்தை இன்றைக்கு சுமுகமாக முடியவில்லை என்பதை விட, முடிந்துவிட்டது என்று அறிவித்த கட்சிகள் கூட அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதை விட ஆத்திரத்தில் இருக்கிறார்கள்.
எடுத்துக்காட்டு, மதிமுக நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் 6 இடங்கள் கொடுத்து 4 இடங்களில் அவர்கள் வென்றார்கள். அவர்கள் தேர்தல் ஆணையத்தினுடைய அங்கீகாரத்தைப் பெற வேண்டுமென்றால் 8 தொகுதிகள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். வைகோவுக்கு நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் தகுதியும் பொறுப்பும் வேண்டும் என்று கேட்டார்கள். அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. வைகோ தமிழ்நாட்டு அரசியலில் தனித்து கைவிடப்பட்டிருக்கிறார். அதைத் தாண்டி 8 தொகுதி கேட்ட கட்சிக்கு 4 தொகுதி மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என்று நிர்ப்பந்தித்து, நெருக்கடி கொடுத்து, அழுத்தம் கொடுத்து அவர்களைச் சம்மதிக்க வைத்திருக்கிறார். 1 தொகுதியில் உங்கள் சொந்தச் சின்னத்தில் நில்லுங்கள் என்று அறிவித்திருக்கிறார்கள்.
பாஜக கூட்டணி. அண்ணா திமுக தான் அந்த கூட்டணிக்கு சீஃப் (Chief), தலைமை தாங்குகிறது என்றாலும், அண்ணா திமுகவினுடைய தலைமையை ஏற்க உள்துறை அமைச்சர் அமித்ஷா தயாராக இல்லை. மதுராந்தகத்தில், மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயக கூட்டணி என்று பேசுகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அண்ணா திமுக ஆட்சி அமையும் என்கிறார். அவர் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்கிறார். மேடையிலேயே வெளிப்படையாக இந்த முரண்பாடு வெடித்துவிட்டது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி என்று நரேந்திர மோடி சொன்னதற்குப் பிறகு இப்படிச் சொல்லாதீர்கள் என்று அவரிடத்திலே கேட்டுக்கொள்கிற துணிச்சல் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. “நீ என்ன எங்களுக்கு செக் வைக்கிறாயா? வா டெல்லிக்கு” என்று ஒரு முதலமைச்சராக இருந்தவரை, கூட்டணிக்குத் தலைமை தாங்குபவரை டெல்லிக்கு அழைத்து என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை. இன்றைக்கு அச்சடித்த பதுமையை, அச்சடித்த பிண்டத்தைப் போல எடப்பாடி பழனிசாமி மாறிவிட்டார். ஆகவே தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தக் கூட முடியாத அளவுக்கு அச்சத்திலும் பீதியிலும் உறைந்து கிடக்கிறது அண்ணா திமுக.
இன்றைக்கு இந்தச் சூழலில் தவெக மட்டும்தான் சுயமரியாதையோடு, தனித்தன்மையோடு 234 தொகுதிகளிலும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையோடு நாங்கள் களத்திற்கு வருகிறோம். இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறினார்.
செய்தியாளரின் கேள்வியும் நாஞ்சில் சம்பத் பதிலும்
கேள்வி: NDA கூட்டணி கூட தவெக பேசிட்டு இருக்காங்கன்னு செய்தி வருதே?
நாஞ்சில் சம்பத்: அவர்களுக்கு அப்படி ஒரு விருப்பமும் நோக்கமும் இருக்கிறது. நோக்கம் இருக்கிறது, விருப்பமும் இருக்கிறது. அந்த நோக்கத்திற்கு நாங்கள் கட்டுப்பட முடியாது, அந்த விருப்பத்தையும் நாங்கள் பூர்த்தி செய்ய முடியாது.
ஏனென்றால் தேர்தல் தேதி அறிவித்தாகிவிட்டது, இனிமேல் அதற்கான வாய்ப்பு இல்லை. எங்கள் தலைவர் அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என்று அறிவித்துத் தான் இவ்வளவு நாளும் இயங்கிக் கொண்டிருக்கிறோம், அதே நிலைப்பாடு தொடரும்.
கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் அப்படி ஒரு பேச்சுவார்த்தை நடந்ததாக நான் கேள்விப்பட்டேன், ஆனால் தவெக தொண்டர்கள் மத்தியில் அப்படி எந்தவிதமான சலனமும் இல்லை. இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறினார்.
