திமுக ஆட்சியின் ஆட்டம் கடந்த 15-ஆம் தேதியோடு முடிவுக்கு வந்துவிட்டது. தமிழகத்தில் இனி வசந்த காலம் ஆரம்பித்துவிட்டது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை மற்றும் சீர்கெட்டு வரும் சட்டம் – ஒழுங்கைக் கண்டித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (மார்ச் 17) நடைபெற்று வருகின்றன. சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
போராட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்து, இளைஞர்களும் பொதுமக்களும் அதற்கு அடிமையாகி சீரழியும் அவலம் திமுக ஆட்சியில் நீடிக்கிறது. திருநெல்வேலியில் 9-ஆம் வகுப்பு மாணவி பள்ளியிலேயே மது அருந்தும் காட்சி ஊடகங்களில் வெளியாகி ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அவர்களைப் பள்ளிக்கு அனுப்புகிறோம், ஆனால் அங்கு இத்தகைய கலாச்சாரம் பரவுவது வேதனையளிக்கிறது. இதுபற்றி அப்பா ஸ்டாலின் கவலைப்படுவதாகத் தெரியவில்லை,” என்று குற்றம் சாட்டினார்.
செயலிழந்த உளவுத்துறை
தமிழகத்தில் உளவுத்துறை இருக்கிறதா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. உளவுத்துறை என்பது ஸ்டாலின் குடும்பத்திற்கு ஏவல் செய்யும் துறையாகவே மாற்றப்பட்டுள்ளது. போதை ஆசாமிகளைப் பிடிக்கச் செல்லும் காவலர்கள் மீதே தாக்குதல் நடத்தப்படுகிறது. காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவும்போது, பொதுமக்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது,” என்றார்.
மேலும் சென்னை மாநகரில் பட்டப்பகலில் அரசியல் கட்சித் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார்; உண்மையான குற்றவாளிகள் இன்னும் பிடிபடவில்லை. நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கிலும் இதுவரை முன்னேற்றம் இல்லை. நாங்குநேரி மற்றும் சிவகங்கையில் போதை ஆசாமிகள் பொதுமக்களை வெட்டிச் சாய்க்கும் கொடூரங்கள் அரங்கேறியுள்ளன. கிருஷ்ணகிரியில் 2 வயது குழந்தை, குமாரபாளையத்தில் 9 வயது சிறுமி, விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி என பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை பட்டியிலிட்டார்.
மேலும் தமிழகத்தில் 75 நாட்களில் 246 கொலைகள் நடந்துள்ளது. தமிழக மக்களுக்கு பாதுகாப்பில்லை. நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும் 9 மாதங்களாக ஒரு நிரந்தர டிஜிபியை நியமிக்கக் கூடத் திராணியற்ற அரசாக இது உள்ளது.” என விமர்சித்தார்.
நிர்வாகச் சீர்கேடுகள் குறித்துப் பேசுகையில், “மின்கட்டணம் 67%, வீட்டு வரி 100%, கட்டிட அனுமதி கட்டணம் 3 மடங்கு என அனைத்து வரிகளையும் உயர்த்தி மக்களை இந்த அரசு வஞ்சித்துவிட்டது. கட்டுமான பொருட்கள் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.
வசந்த காலம் ஆரம்பம்
மேலும் பேசிய அவர் “குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வந்துவிட்டது. திமுக ஆட்சியின் ஆட்டம் கடந்த 15-ஆம் தேதியோடு முடிவுக்கு வந்துவிட்டது. தமிழகத்தில் இனி வசந்த காலம் ஆரம்பித்துவிட்டது. வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். மே மாதம் நல்லாட்சி அமையும், பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலும் இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலமும் உறுதி செய்யப்படும்,” எனத் தனது உரையை நிறைவு செய்தார்.
