திரையுலகில் அறிமுகமாகி 22 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், உருக்கமுடன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகை நயன்தாரா.
ஒரே துறையில் பல ஆண்டுகள் பயணிப்பதும், அதில் தனது சிறப்பான பங்களிப்பதும் சாதாரண விஷயமல்ல. அதிலும் அழகு, பிட்னஸ் என பல்வேறு விஷயங்கள் தேவைப்படும் திரையுலகில் ஒரு பெண், 22 ஆண்டுகள் முன்னணி கதாநாயகியாக பயணிப்பது என்பது நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது. அந்த வகையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் நடிகை நயன்தாரா.
மலையாள திரையுலகில் 2003ல் வெளியான மனசினக்கரே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் டயானா மரியம் குரியன் என்ற இயற்பெயர் கொண்ட நயன்தாரா.
அதன்பின்னர் 2005 ஆம் ஆண்டு சரத்குமாருடன் ஜோடி சேர்ந்து ‘ஐயா’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். அதே ஆண்டில் வெளியான ரஜினிகாந்தின் சந்திரமுகி திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
அதன்பின்னர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு போன்ற அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து நடித்து, குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையானார்.
தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து தென்னிந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார்.
2010ஆம் ஆண்டுக்கு பிறகு பெண்களை மையமாகக் கொண்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அதில் ‘மாயா’, ‘அறம்’, ‘கோலமாவு கோகிலா’, ‘இமைக்கா நொடிகள்’, ‘நெற்றிக்கண்’, ‘அன்னப்பூரணி’ போன்ற படங்கள் முக்கியமானவை. இதன் காரணமாக, அவர் தென்னிந்தியத் திரையுலகில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று ரசிகர்களாலும் திரையுலகத்தினராலும் அழைக்கப்படுகிறார்.
தென்னிந்தியா மட்டுமின்றி அட்லீ இயக்கத்தில் பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா நடித்த ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை எட்டியது.
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக கதாநாயகியாகத் தனது செல்வாக்கைத் தக்க வைத்துக் கொண்ட மிகச் சில நடிகைகளில் ஒருவராக உருவெடுத்துள்ள நயன் தாரா, திரையுலகில் 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் இன்று அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் முதன்முதலில் கேமரா முன் நின்று 22 வருடங்கள் ஆகின்றன, ஆனால் திரைப்படங்கள் என் வாழ்க்கையின் காதலாக மாறும் என்று தெரியவில்லை. ஒவ்வொரு பிரேமும், ஒவ்வொரு ஷாட்டும், ஒவ்வொரு மௌனமும்… என்னை வடிவமைத்தன, என்னை குணப்படுத்தின, என்னை நானாக இருக்க மாற்றின. என்றென்றும் நன்றியுடன்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.
திரையுலகில் கதாநாயகியாக 22 ஆண்டுகளை கடந்துள்ள நயன்தாரா, தற்போதும் கைவசம் பல படங்களை வைத்துள்ளார். சுந்தர் சியின் பிரமாண்ட படமான ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நடித்து வருகிறார். கன்னடத்தில் யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படத்திலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘மனா சங்கரா வரப்பிரசாத் காரு’ படத்திலும் நடிக்கிறார்.
மேலும், மம்மூட்டி, மோகன்லால், ஃபகத் பாசில் நடிக்கும் மலையாளப் படமான ‘பேட்ரியாட்’டிலும் நயன்தாரா இருக்கிறார். இது தவிர ‘ராக்காயி’, ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’, ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ ஆகிய படங்களிலும் நயன்தாரா நடித்து வருகிறார்.
சமீபத்தில் பிரபல பாடலாசிரியாரான விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகும் ஹாய் படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். கவினுக்கு ஜோடியாக நடிக்கும் இப்படத்தின் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.