தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா இன்று (நவம்பர் 18,) தனது 41வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி, அவர் நடிக்கும் ‘NBK111’ திரைப்படத்தின் முதல் பார்வை வீடியோ வெளியாகியுள்ளது.
நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் இந்த படத்தில் நடிக்கிறார். ஒரு சக்திவாய்ந்த ராணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதால், இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கவின் உடன் இணைந்து ‘Hi’ திரைப்படத்திலும் நடிக்கிறார் நயன்தாரா.

2003 ஆம் ஆண்டு மலையாளத்தில் ‘மனசினக்கரே’ மூலம் அறிமுகமானவர், 2005 ஆம் ஆண்டு வெளியான ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். ரஜினிகாந்த், விஜய், அஜித், சிம்பு, விஷால், ஜீவா, ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களும் ஜோடி சேர்ந்து நடித்ததோடு மட்டுமல்லாமல், ‘சந்திரமுகி’, ‘கஜினி’, ‘பில்லா’, ‘யாரடி நீ மோகினி’ போன்ற படங்கள் மூலம் தனது ஆரம்பகால வெற்றிகளைப் பதிவு செய்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 75க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாகப் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர்.
‘ராஜா ராணி’, ‘அறம்’, ‘கோலமாவு கோகிலா’, ‘இமைக்கா நொடிகள்’ போன்ற படங்கள் அவரது நடிப்புத் திறமையை வெளிகாட்டின.
அண்மையில், பாலிவுட்டில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ திரைப்படம் மூலம் அறிமுகமாகி அங்கும் தனது வெற்றிக் கொடியை நாட்டினார்.
இவரது வெற்றிக்கு தொழில் பக்தி என கூறப்படுகிறது. அதாவது 9 மணிக்கு படபிடிப்பு என்றால் 8.55 மணிகெல்லாம், மேக்கப் எல்லாம் போட்டு ரெடியாகி ஷூட்டுக்கு வந்துவிடுவாராம். அதுபோன்று எவ்வளவு நேரம் ஆனாலும் ஷூட் முடிந்தால் தான் கேரவனுக்கு செல்வார் என்றும் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
தான் நடித்த ராமராஜ்ஜியம் படத்திற்காக கடுமையாக விரதம் இருந்தார் நயன்தாரா.
இப்படி, சினிமா மட்டுமல்லாது, வெற்றிகரமான தொழில்முனைவோராகவும் நயன்தாரா வலம் வருகிறார். தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும், ‘9ஸ்கின்’ என்ற அழகுசாதனப் பொருள் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
.
