ஆஸ்திரேலியாவில் வெறும் அரை முழம் மல்லிகை பூ வைத்து சென்றதற்காக நடிகை நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை நவ்யா நாயர் ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மலையாளிகள் சங்கத்தினர் நடத்திய ஓணம் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள சென்றார்.
பார்வையாளர்களிடம் உரையாற்றும்போது, மெல்போன் விமான நிலையத்தில் நடந்ததை அவர் விவரித்தார். “நான் இங்கு வருவதற்கு முன்பு, என் அப்பாதான் எனக்காக மல்லிகைப்பூ வாங்கி வந்தார். அதை இரண்டு பகுதிகளாக வெட்டி என்னிடம் கொடுத்தார். கொச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்லும் போது ஒரு பகுதியையும், சிங்கப்பூரில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் போது மற்றொரு பகுதி பூவையும் வைத்து கொள்ளச் சொன்னார்.
இதனால் நான் ஒரு பகுதி பூவை தலையில் வைத்து கொண்டேன். மீதமிருந்த பூவை எனது கைப்பையில் வைத்திருந்தேன். ஆஸ்திரேலியாவில் மல்லிகைப் பூ வைக்க தடை என்பது எனக்கு தெரியாது. அதனால் நானும் அப்பா சொன்னது போல் சிங்கப்பூரில் இருந்து ஆஸ்திரேலியா கிளம்பிய போது மீதி பூவை தலையில் வைத்துக்கொண்டேன்.
“நான் செய்தது சட்டத்திற்கு எதிரானது. அது நான் அறியாமல் செய்த தவறு. அறியாமை ஒரு சாக்குப்போக்கு அல்ல. 15 செ.மீ மல்லிகைச் சரத்தை கொண்டு வந்ததற்கு, அதிகாரிகள் என்னிடம் 1,980 டாலர் அபராதம் (ரூ.1.14 லட்சம்)செலுத்தச் சொன்னார்கள். தவறு என்பது தவறுதான், இருப்பினும் அது வேண்டுமென்றே செய்யப்படவில்லை. அபராதத்தை 28 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த சம்பவத்தை சிரித்துக் கொண்டே பகிர்ந்து கொண்ட நவ்யா, “ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள மல்லிகைப் பொட்டலத்துடன்” ஆஸ்திரேலியாவில் இறங்கியதாக நகைச்சுவையாகக் கூறினார்.
மல்லிகை பூவில் பூச்சி கொல்லி போன்றவை இருக்க வாய்ப்புள்ளது என்பதால் ஆஸ்திரோலியாவின் பசுமையையும், விவசாயத்தையும் பாதுகாக்கும் நோக்கில் அந்த பூவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.