பட்டியலின அதிகாரி அமர்ந்த இடத்தை சாணி போட்டு மொழுகிய திமுக தொழிற்சங்க செயலாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்துக் கழகம் கிளை-1 ல் ஓட்டுநராகப் பணியாற்றுபவர் சசிராஜ். இவர் திமுக தொழிற்சங்கத்தில் செயலாளராக உள்ளார். மேட்டுப்பாளையம் பணிமனையில் ஓட்டுநர், நடத்துநர் என 43 பேர் பணியாற்றி வருகின்றனர். ஆதிக்க சாதியைச் சார்ந்த சசிராஜின் கட்டுப்பாட்டிலேயே இந்தக் கிளை இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
சசிராஜ் ஆதிக்க சமூகத்தினருக்கு மட்டும் அருகிலேயே டூட்டி வழங்கி, பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தூரத்தில் டூட்டி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கடந்த சில மாதங்களில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ராஜ்குமார், பிரகாஷ் ஆகியோர் இங்கு பணிமனை மேலாளராகப் பணியாற்ற வந்தனர். சசிராஜ் தொடர்ந்து கொடுத்து வந்த சிறு சிறு தொல்லைகளால் ஒருவர் 20 நாட்களும், மற்றொருவர் 15 நாட்களும் மட்டுமே பணியாற்றிய பின்னர் இடமாற்றமாகிச் சென்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், “முன்பு இங்கு பணியாற்றிய பட்டியலின அதிகாரிகள் இருந்த இடத்தை சாணி போட்டு மொழுகிவிட்டு, ‘புதிய அதிகாரியை வரவேற்போம்’ என அரசு அலுவலகத்தையே சாணி போட்டு மொழுகி சாதிய வன்கொடுமை நிகழ்த்தியுள்ளார்” என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகாரளிக்கப்பட்டது.புகாரின் பேரில், 28.01.2026 முதல் சசிராஜ் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 15 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்குமாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை மண்டல சட்டப்பிரிவின் உதவி மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து விளக்கமளித்த சசிராஜ், “சாதி பார்த்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு பணி வழங்கவில்லை. மேலாளர் அமர்ந்திருந்த அறையில் அதிக அளவு கறை இருந்ததால் சாணி போட்டு மொழுகியதாக” தெரிவித்தார்.
இந்நிலையில், சசிராஜ் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 5 நாட்களுக்குள் விளக்கமளிக்குமாறு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் குற்றம் சாட்டப்பட்டவரின் முகவரி, அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்கள், கைது செய்யப்பட்டுள்ளாரா?, வழக்கு எண், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? போன்ற விவரங்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையிடம் கேட்டுள்ளது.
