திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்த போது சுவாரசிய நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன.

வேடசந்தூரில் நேற்று (செப்டம்பர் 25) பிரம்மாண்டமாக கூடியிருந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.
இந்தக் கூட்டத்தில், “திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும் கழகப் பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன், கிழக்கு மாவட்ட செயலாளரும் துணைப் பொதுச் செயலாளருமான நத்தம் விஸ்வநாதன்” என பெயர்களை எடப்பாடி உச்சரித்த போது கூட்டம் ரொம்பவே அமைதியாக இருந்தது.
“அதிமுக என்ற இவ்வளவு பெரிய கட்சியின் ஒரு மா.செ.வாக இருந்தாலும் நமது பெயரை உச்சரிக்கும் போது ஒருவரும் ஆரவாரம் செய்யவில்லையே” என்கிற ஆதங்கம் திண்டுக்கல் சீனிவாசன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

அதே நேரத்தில் மற்றொரு மா.செ.வான நத்தம் விஸ்வநாதன் பெயரை எடப்பாடி உச்சரித்தாலும் அவரை காணலையே என்கிற ‘தேடலும்’ கூட்டத்தில் இருந்தது.. பொதுமக்களும் ‘நத்தம் விஸ்வநாதன்’ இந்த கூட்டத்துக்கு வரலையோ? என கேள்வி கேட்டுக் கொண்டனர்.
அடுத்ததாக, “வேடசந்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கழக இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் விபிபி பரமசிவம்” என பெயரை எடப்பாடி பழனிசாமி சொல்ல, ஒட்டுமொத்த கூட்டமும் ஆரவாரம் செய்து அதிரவைத்தது. அப்போது, திண்டுக்கல் சீனிவாசன் முகத்தில் லேசான இறுக்கம் தெரிந்தாலும் கூட்டத்தோடு கூட்டமாக கை தட்டினார்.
“பொதுவாக கட்சிகளில் மாவட்ட செயலாளர்கள் பெயரை சொன்னாலே கூட்டம் அதிரும்.. திண்டுக்கல்லில் மா.செக்களாக இருக்கும் இரண்டு சீனியர்களான சீனிவாசன், விஸ்வநாதன் பெயரை சொல்லியும் ஒருத்தர் கூட ஆர்ப்பரிக்கலை.. ஆனால் டாக்டர் பெயரை (விபிபி பரமசிவம்) பெயரை சொன்னதும் இப்படி கூட்டம் அதிருது.. அப்ப யாரு வேலை செய்யுறாங்கன்னு தொண்டர்களுக்கு தெரியுது” என்கிற பத்திரிகையாளர்களின் கமெண்ட் நமது காதில் விழுந்தது.
இந்த கூட்டம் முடிந்த பின்னர், நத்தம் விஸ்வநாதன் ஏன் வரலை? அவரு புறக்கணித்துவிட்டாரா? என்கிற பரபரப்பும் கேள்விகளும் எழுந்தன.
இதற்கும் காரணம் இருக்கிறது.. அண்மையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த போது திண்டுக்கல் சீனிவாசனை மட்டும் அழைத்துச் சென்றார்; கடைசி நேரத்தில் தம்மை கழற்றிவிட்டு விட்டார் எடப்பாடி பழனிசாமி என்கிற வருத்தத்தில் நத்தம் விஸ்வநாதன் இருப்பதாக செய்திகள் வலம் வந்ததால் நேற்றும் எதிர்பார்ப்பும் பரபரப்பும் ஏற்பட்டது.
இது தொடர்பாக நாம் வேடசந்தூர் அதிமுகவினரிடம் பேசிய போது, “இல்லை.. இல்லை.. நத்தம் விஸ்வநாதன் வந்திருந்தார்.. எடப்பாடியாரின் பேருந்தில் பின் சீட்டில்தான் அமர்ந்திருந்தார்..” என்றனர்.
“பேருந்துக்குள் இருந்தவர் ஏன் மேலே ஏறி எடப்பாடியுடன் நிற்கவில்லையே? அப்படி நின்றிருந்தால் இந்த கேள்வியே வந்திருக்காதே?” என நாம் மீண்டும் கேள்வி கேட்டோம்..
அதற்கு, “எடப்பாடியாரின் பேருந்து மீது அவருடன் சேர்ந்து மொத்தம் 3 பேர்தான் முன்வரிசையில் நிற்க முடியும். அவருக்கு பின்னால் பாதுகாவலர்கள் நிற்பார்கள்.
முன்வரிசையில் எடப்பாடியுடன், வேடசந்தூர் தொகுதி- திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தில் வருவதால் மா.செ. திண்டுக்கல் சீனிவாசன் நின்றார்.. எடப்பாடிக்கு இன்னொரு பக்கத்தில் வேடசந்தூர் முன்னாள் எம்.எல்.ஏ, கட்சியின் மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் என்பதால் டாக்டர் விபிபி பரமசிவம் நின்றார்.. இதில் நத்தம் விஸ்வநாதன் எங்கே போய் நிற்க முடியும்? இதை நன்றாகவே உணர்ந்து கொண்டு அவராகவே, “நான் உள்ளேயே உட்கார்ந்திருக்கிறேன்” என ‘ஒதுங்கி’விட்டார்.. அதனால்தான் அந்த ‘தல’ தலையை காட்டலை என நமட்டு சிரிப்பு சிரிக்கின்றனர்.