உள்நாட்டு அரசியலில் மோடி எதிர்க்கட்சிகளை நடத்தும் விதம், அடிப்படையில் இந்திய அரசியலின் சாபக்கேடாகவும், இன்று ஜனநாயகப் பின்னடைவின் முதன்மைக் காரணமாகவும் உள்ளது.
எம்.கே. வேணு

பிரதமர் நரேந்திர மோடி ஒன்றை அறிந்துகொள்ள வேண்டும் ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிநாட்டில் முன்வைக்க எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பைக் கோரினால் மட்டும் போதாது. உள்நாட்டு அரசியலில் எதிர்க்கட்சிகளுக்கு ஓரளவேனும் மரியாதையைக் காட்ட வேண்டும்.
வெளிநாட்டில் ஒருங்கிணைந்த வெளியுறவுக் கொள்கை நிலைப்பாட்டை முன்வைக்க எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பைக் கோரிவிட்டு, உள்நாட்டு அரசியலில் எதிர்க்கட்சிகளை “எதிரிகளாக” தொடர்ந்து நடத்த முடியாது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பின்னடைவுக்குப் பிறகு, பாஜக எதிர்க்கட்சிகளை எதிரிகளாக நடத்த வேண்டாம் என்றும், ஆக்கபூர்வமான ஈடுபாட்டை நாட வேண்டும் என்றும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத் தலைவர் மோகன் பகவத் அறிவுறுத்தியிருந்தார்.

2024 மக்களவைத் தேர்தல் முடிவுகளிலிருந்து மோடி ஏதேனும் பாடம் கற்றுக்கொண்டாரா? அடிப்படை மனப்பான்மையும் அணுகுமுறையும் மாறியதாகத் தெரியவில்லை. நிர்ப்பந்தப்படுத்தும் அரசியல் மூலம் எதிர்க்கட்சிகளை ஏளனமாகக் கையாள முடியும் என்று மோடி இன்னும் நம்புகிறார். ஆபரேஷன் சிந்தூர் ஓரளவு வெற்றி பெற்றாலும், தவிர்க்கப்பட்டிருக்கக்கூடிய தவறுகள் நடந்தன என்பது இப்போது அனைவரும் அறிந்ததே. இதை அரசாங்கம் இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், பொறுப்புள்ள இந்திய ராணுவ அதிகாரிகள் பொது மன்றங்களில் போதுமான குறிப்புகளைக் கொடுத்துள்ளனர்.
ஒரு நேர்மையான ராணுவ அதிகாரி, சில இந்தியப் போர் விமானங்கள் கீழே விழுந்ததற்கான ஒரு காரணமாக “அரசியல் தலைமைத்துவத்திலிருந்து கட்டுப்பாடு” என்பதைக் குறிப்பிட்டபோது, அவர் உண்மையின் தரப்பில் நின்றார். மோடி அரசாங்கத்தின் மௌனமோ பிரதமரின் பிம்பத்தைப் பாதுகாப்பதாகவே இருந்தது.
ஆபரேஷன் சிந்துாருக்குப் பிறகு மோடி வெளிப்படையாகப் பின்னடைவில் இருந்தார். அது ஒரு முழுமையான வெற்றி என்று தனது ஆதரவாளர்களைக்கூட முழுமையாக நம்பவைக்க அவரால் முடியவில்லை. எனவே, முதன்முறையாகத் தனது அகந்தையை விழுங்கி, பாகிஸ்தானின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் எந்த நாடும் வெளிப்படையாகக் கண்டனம் தெரிவிக்காததால், இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிநாட்டில் முன்வைக்க ஒரு கூட்டுப் பிரதிநிதிக் குழுவில் பங்கேற்க எதிர்க்கட்சிகளை அணுகினார்.
ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, ஆபரேஷன் சிந்துார் குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்பி, எல்லாவற்றையும் விரிவாக விவாதிக்க ஒரு சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரைக் கோரியது. பிற எதிர்க்கட்சிகளும் அதையே விரும்பின. ஆனால், எதிர்க்கட்சிகளை ஏளனமாகவும் அலட்சியமாகவும் கையாளும் போக்கு இந்த ஆட்சியின் மரபணுவிலேயே பொதிந்துள்ளதால் அந்தக் கோரிக்கையை அது ஏற்கவில்லை.

நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்தார். இது பாஜகவுக்குத் தேவைப்பட்ட ஒரு திசை திருப்பலாகும். ஆபரேஷன் சிந்தூர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்த வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுடன் இணைக்கப்பட்ட வினோதமான கூற்றுக்கள் போன்ற தேசிய நலன் சார்ந்த முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பதற்கான வாய்ப்பாக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் அமைய வேண்டும். உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தியின் அதிபர் 25 முறை, அணு ஆயுத மோதலாக மாறவிருந்த இந்தியா-பாகிஸ்தான் மோதலை வர்த்தக அச்சுறுத்தல் மூலம் தான் நிறுத்தியதாக மீண்டும் மீண்டும் கூறியிருந்தார்.
மோடி விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்த விவாதம் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட வேண்டும். மோடியின் தனிப்பட்ட பிம்பத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த நாட்டின் மக்களை இருட்டில் வைத்திருக்க முடியாது. இதுவே, உண்மையில், பிரச்சினையின் மையமாகும். ஆபரேஷன் சிந்தூர், அது எழுப்பிய பல பிரச்சினைகள் ஆகியவை குறித்து விவாதித்து, தேசிய நலன்களை மேலும் முன்னெடுக்க நாடாளுமன்றத்தில் வெளிப்படையான விவாதம் தேவைப்படுகிறது. ஆனால் இந்த அரசு, மோடியின் பிம்பத்தைப் பாதுகாக்க கவனச்சிதறல்களையும் குழப்பங்களையும் உருவாக்க முனைந்துள்ளது. அதையும் மீறி இரு அவைகளிலும் ஆபரேஷன் சிந்தூர் பற்றியும் அமெரிக்க அதிபரின் தலையீடு பற்றியும் முக்கியமான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

தேசிய நலனும் மோடியின் பிம்பத்தைக் காப்பாற்றுவதற்கான முயற்சியும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. இது ஆபரேஷன் சிந்துாரின்போதே தெளிவாகத் தெரிந்தது. பாகிஸ்தானை இரண்டில் ஒன்று பார்த்துவிடக்கூடிய போர்வீரராக மோடியை பாஜக ஆதரவு ஊடகங்கள் சித்தரித்தன. ஆனால் போர் நிறுத்தம் ஏற்பட்டவுடன், மோடியின் படம் அகற்றப்பட்டு, போர் நிறுத்தத்தை அறிவித்த அரசாங்க செய்தித் தொடர்பாளர் விக்ரம் மிஸ்ரியின் படம் இடம்பெற்றது. அதாவது, போர் முழக்கம் என்றால் பிரதமரின் படம்; சமாதானம் என்றால் ராணுவ அதிகாரியின் படம். இப்படித்தான் நாட்டு மக்களை ஏமாற்றி மோடியின் பிம்பத்தைக் காப்பாற்ற ஊடகங்கள் முனைகின்றன.

உள்நாட்டில் தனது பிம்பத்தைப் பட்டை தீட்ட, மோடி எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பைப் பயன்படுத்தினார். எதிர்க்கட்சிப் பிரதிநிதிக் குழு திரும்ப வருவதற்கு முன்பே, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஒரு பொது மன்றத்தில், 1970களில் இந்திராகாந்தியால் கூட செய்ய முடியாததை மோடி எதிர்க்கட்சிகளுடன் சாதித்துள்ளார் என்று பெருமையாகப் பேசினார்.
எல்லாப் பிரச்சினைகளையும் முதலில் மோடியின் தனிப்பட்ட பிம்பத்தைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பாகவே பாஜக பார்க்கிறது. அதன் பிறகுதான் மற்ற விஷயங்கள்.
சசி தரூர், மனீஷ் திவாரி போன்றவர்கள் “தேசிய நலன்” என்று கூறி ஆபரேஷன் சிந்துாருக்கு முழு ஆதரவை அளிக்கும்போது, மோடியின் இந்த அகந்தை உணர்வை அவர்கள் உள்வாங்கியிருப்பார்கள் என்றுதான் நம்ப வேண்டியுள்ளது. “தேசிய நலன்” உள்நாட்டு அரசியலில் மோடியின் நலனாக எப்படித் தடையின்றி மாறுகிறது என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? உலக மன்றங்களில் அவர்கள் எதிர்க்கும் இந்தியாவுடனான பாகிஸ்தானின் இணைவு, உள்ளூரில் மோடியின் பிம்பத்தைக் கட்டியெழுப்பும் அரசியலின் ஒரு முக்கிய அங்கமாக இருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா?.

உண்மையில், மோடி உள்நாட்டு அரசியலில் எதிர்க்கட்சிகளை நடத்தும் விதம், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தே சரியாகச் சொன்னபடி, அடிப்படையில் இந்திய அரசியலின் சாபக்கேடாகவும், இன்று ஜனநாயகப் பின்னடைவின் முதன்மைக் காரணமாகவும் உள்ளது. இது சரிசெய்யப்படாவிட்டால், எதுவும் சரிசெய்யப்படாது.
நன்றி: தி வயர் இணைய இதழ்
கட்டுரையாளர் குறிப்பு:
எம்.கே.வேணு, தி வயர் இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராகப் பணியாற்றிவரும் ஊடகவியலாளர், அரசியல் விமர்சகர்.