தமிழக வெற்றிக் கழகத்தில் கூட்டணிக்கான காலம் கனிந்து வருகிறது என தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இன்று (பிப்ரவரி 7) நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,”பொதுமக்கள், தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர்களிடமிருந்து கருத்துக்களைக் கேட்பதற்கு டாக்டர் அருண்ராஜ் இன்று கோவைக்குச் சென்றுள்ளார். இதுவரை தமிழகம் பார்க்காத, கேட்காத ஒரு தேர்தல் அறிக்கை விரைவில் வெளிவரும். கூட்டணி இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். அதற்கான காலமும் கனிந்து வருகிறது. அதிகாரத்தில் இருக்கும் திமுகவை வீழ்த்துகின்ற போரில் எங்கள் தலைவர் வெற்றி பெறுவார். எங்களுக்கும் கூட்டணி அமையும். அதை இப்போது சொல்ல முடியாது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அதிமுக நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி, தவெக கொடி பறக்கிறது.. கூட்டணி வரும்’ என்றார். அப்போதிருந்து கடுமையான விமர்சனங்கள் வைக்காத நிலையில், கூட்டணி அமையாத நிலை உள்ளது. இதைத் தொடர்ந்து எடப்பாடி மற்றும் விஜய் என இரு தரப்பும் விமர்சனம் வைப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, ‘இப்படியொரு ஈனத்தனமான நடவடிக்கை எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டு அரசியலில் யாரும் செய்யவில்லை. அதிமுக தொண்டன் கையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியைக் கொடுத்துப் பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று ஒருவர் பேசுகிறார் என்றால், அவரை நான் எப்படி அழைப்பது என்று எனக்குத் தெரியவில்லை’ என்றார்.
கடந்த 25-ஆம் தேதி மாவட்ட, மாநகர, நகர ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டத்தில் மாமல்லபுரத்தில் தலைவர் பேசுகையில், ‘ஊழலற்ற நிர்வாகத்தைத் தமிழ்நாட்டுக்குத் தருவேன்’ என்று ஒரு உத்தரவாதம் தந்திருக்கிறார். ஆகவே ஊழலற்ற நிர்வாகம் என்றால், ஒரு 26 இடங்களில் ரெய்டு செய்யப்பட்டு அதற்குப் பிறகு மோடியின் காலடியில் விழுந்தவர் எடப்பாடி பழனிசாமி.
குட்கா வழக்கில் சிக்கியிருப்பவர் டாக்டர் விஜயபாஸ்கர். அதேபோல் ஒரு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறைக்குச் சென்றவர் கரூரைச் சேர்ந்த விஜயபாஸ்கர். வேலுமணியின் மீது வழக்கு. வீரமணியின் மீது வழக்கு. இப்படி அதிமுக அமைச்சரவையில் ஓரிருவரைத் தவிர எல்லோரும் ஊழலில் கரை படிந்தவர்கள் என்பதை நாடு பார்த்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்ன அண்ணன் ஸ்டாலின் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஆகவே ஊழலற்ற நிர்வாகத்திற்கு உத்தரவாதம் தருகிறேன் என்று சொன்னதற்குப் பிறகு, ஊழல் கரை படிந்தவர்களோடு கூட்டணி வைத்துக் கொள்வது ஆரோக்கியமான அரசியலாக இருக்காது. அதை எங்கள் தலைவர் வெளிப்படுத்தியதற்காக அதிமுகவில் இன்று சில விமர்சனங்கள் வருகின்றன. நாங்கள் இந்த விமர்சனங்களைக் கடந்து செல்கிறோம்.
அதிமுக எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. போட்டி எங்களுக்கும் திமுகவுக்கும் தான். ஆகவே அதிமுக, பிஜேபியை விமர்சிப்பதற்கு இது நேரமும் அல்ல. யுத்தம் நடைபெறுகின்ற இடம் தமிழ்நாடு. களத்தில் நிற்கிறோம். திமுகவை வீழ்த்துவோம்” என்றார்.
விஜயின் புலி பட அபராதம் குறித்த கேள்விக்கு, “அது இன்னும் நீதிமன்றத்தில் இருக்கிறது. அதற்குப் பதில் என்னால் தர முடியாது” என்றார்.
