தமிழக அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் திருவண்ணாமலை பெயர் ‘அருணாச்சலம்- Arunachalam’ என பெயர் மாற்றப்பட்டது சர்ச்சையாக வெடித்த நிலையில் அப்பெயர் நீக்கப்பட்டுள்ளது. Thiruvannamalai Arunachalam
திருவண்ணாமலை கோவிலுக்கு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் பக்தர்களும் பெரும் எண்ணிக்கையில் வருகை தருகின்றனர்.

தெலுங்கானா அரசு போக்குவரத்துக் கழகத்தின் டூர் பேக்கேஜில், திருவண்ணாமலை என குறிப்பிடுவதற்கு பதிலாக ‘Arunachalam’ என்றுதான் இடம் பெற்றிருக்கிறது.

இதேபோல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளிலும் Arunachalam என குறிப்பிடப்பட்டு இயக்கப்பட்டு வந்தன. இது சர்ச்சையாக வெடித்தது. சமூக வலைதளங்களிலும் இது தொடர்பான படங்கள் பகிரப்பட்டு விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அரசு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்தில் ‘Arunachalam’ என்ற பெயர் நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்துக் கழகம் அனுப்பிய சுற்றறிக்கையில், “சங்கராபுரம் கிளை பேருந்து எண் TN32N4861 கள்ளக்குறிச்சி முதல் திருப்பதி வரை செல்லும் அரசு பேருந்தில் அருணாசலம் என ஆங்கிலத்தில் டிஜிட்டல் போர்டில் வருவது சங்கராபுரம் கிளை மேலாளர் மூலம் நீக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வேறு சில அரசு பேருந்துகளிலும் இதேபோல ‘Arunachalam’ என்ற பெயர் இடம் பெற்றிருப்பதும் சமூக வலைதளங்களில் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.