நல்லகண்ணு மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், எளிமையின் சிகரமுமான நல்லகண்ணு வயது முதிர்வு, உடல் நல குறைவு காரணமாக இன்று காலமானார்.
அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளை இன்று காலை முதல் நல்லகண்ணுவின் உடல் ஏற்கவில்லை. ஒவ்வொரு உறுப்பாக செயலிழந்து மதியம் 1.55 மணியளவில் காலமானார் என்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கூறியுள்ளது.
இந்நிலையில் தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினரும் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.
இந்தசூழலில் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கம் மூலம் நல்லகண்ணுவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “நல்லகண்ணு அடித்தட்டு மக்களுடனான தொடர்புக்காகவும், உரிமை மறுக்கப்பட்டோர், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்காகக் குரல் கொடுக்கும் முயற்சிகளுக்காகவும் நினைவுகூரப்படுவார். சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களாலும் அவர் பெரிதும் மதிக்கப்பட்டார். அவரது எளிமையும் அதே அளவுக்குக் குறிப்பிடத்தக்கது. எனது எண்ணங்கள் யாவும் அவரது குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுடன் உள்ளன” என்று கூறியுள்ளார்.
முன்னதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் நல்லகண்ணு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
நல்லகண்ணுவுக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
