பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் தாய்மாமன் சீர் கொண்டு வருவது போல பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை கொண்டு வருகிறார் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, திருச்சியில் இன்று (மார்ச் 11) நடைபெற்ற என்டிஏ (NDA) கூட்டணியின் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில் “திமுக மாநாட்டில் ஸ்டாலின் பேசுகையில், தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்குமான போட்டி இந்தத் தேர்தல் என்று சொன்னார். நான் சொல்கிறேன், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, இது ஒரு குடும்பத்தின் ஆட்சிக்கும் தமிழ்நாட்டு மக்களுக்குமான தேர்தல். குடும்ப ஆட்சியை முடிவுக்கட்டும் தேர்தல் இது.
பிரதமர் மோடி எப்போதெல்லாம் தமிழகத்துக்கு வருகிறாரோ, அப்போதெல்லாம் தாய்மாமன் சீர் கொண்டு வருவதைப் போல திட்டங்களை கொண்டு வருகிறார். இன்றைக்கும் 5,600 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். மதுரைக்கு வந்தபோது 4,400 கோடி ரூபாய் திட்டங்களை வழங்கினார். தாய்மாமன் சீர் கூட லேட்டாகத்தான் வரும், ஆனால் எங்கள் பிரதமரின் சீர் இன்று தமிழகத்துக்கு வந்துகொண்டே இருக்கிறது.
கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் 1,700 கோடி ரூபாய்க்கு திட்டங்களை தூத்துக்குடியில் தந்தார். 2025-ஆம் ஆண்டு பிரதமர் மோடி தூத்துக்குடிக்கு வந்து ரூ.5,000 கோடிக்கு துறைமுக திட்டங்களை தந்தார். யார் தந்தது? பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களுக்காகத் தந்தார்.
மலேசியா உள்ளிட்ட எந்த நாடுகளுக்குப் போனாலும், தமிழ் கலாச்சாரம், பண்பாடு பற்றி பேசுகிறார்.
முதல்வர் ஸ்டாலின் என்ன கொடுத்தார்கள் என்று கேட்கிறார். கடந்த காங்கிரஸ்-திமுக ஆட்சி மத்தியில் இருந்ததைவிட 14 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்துக்கு தந்த தலைவர் நரேந்திர மோடி.
கிரிக்கெட் போட்டியில் கடைசி பந்து வேகமாக வீச வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லி உள்ளார். நான் கேட்கிறேன்.. நீங்கள் வீசுவதற்கு களத்தில் விக்கெட் இருக்காது. எங்கே வந்து வீசப் போகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், ‘நேற்று இன்று நாளை’ படத்தில் வரும் பாடலை மேற்கோள் காட்டி, “தெருத்தெருவாய் கூட்டுவது பொதுநலத்தோண்டு ஊரார் தெரிந்து கொள்ள படப்பிடித்தால் சுயநலம் உண்டு. மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார், தம் மக்கள் நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார்” என்று பாடி நயினார், அந்த வகையில் மு.க. ஸ்டாலின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவித்தார்.
