தமிழக வெற்றிக் கழக மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா யாரென்றே தெரியாது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக தலைவர் விஜய் தொடர்பான பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். நெல்லையில் இன்று (மார்ச் 19) செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் எதிர்க்கட்சிகள் Income Tax, ED-ஐ வைத்து மிரட்டுவதாகக் குற்றச்சாட்டுவது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “திடீரென இன்று வந்து ஒரு கேஸ் போட்டால் மிரட்டுவது மாதிரி சொல்லலாம். ஆனால் கேஸ் போட்டு 5 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதே. கடந்த தேர்தலுக்கு முன்பே எல்லோர் மீதும் கேஸ் இருக்கிறது. அதற்கும் பாஜக மிரட்டுவதாகச் சொல்ல முடியுமா? விஜய் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே பல திமுக அமைச்சர்கள் மீது ED, Income Tax வழக்குகள் இருக்கின்றன. பத்து வருடத்துக்கு முன்பான வழக்குகளும் உள்ளன. இந்த நிலையில் ‘மிரட்டுற மாதிரி’ என்று நீங்கள் சொன்னால் அது எப்படி பொருத்தமாக இருக்கும்?”என்றார்.
கூட்டணி குறித்து விஜய் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பேசியது குறித்த கேள்விக்கு, “ஏற்கனவே நான் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் என்ற முறையில் யாரோடும் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று சொல்லி விட்டேன். அவர்களும் யாரும் என்னிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இல்லாத பட்சத்தில் ஒரு பிம்பம், ஒரு கம்பம் என்று எல்லாம் தேவையில்லை” என்ற விஜய்யின் பேச்சுக்கு பதிலடி கொடுத்தார்.
ஆதவ் அர்ஜூனா 96 சீட்கள், இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி என்று ஆஃபர் கொடுத்ததாகக் கூறியது பொய்யா? என்ற கேள்விக்கு, “நீங்கள் சொல்லும் நபரையே எனக்குத் தெரியாது” என்றார்.
“ஜனநாயகன் ரிலீஸ் குறித்த கேள்விக்கு, “அதை நீங்கள் சினிமா துறையில் உள்ளவர்கள் யாரிடமாவது கேட்க வேண்டும்” என்றார். மேலும்,”ED, Income Tax எல்லாமே தனி அமைப்புகள். அதில் சம்பந்தப்பட்டிருந்தால் மட்டுமே தொடர்புபடுத்த முடியும். சம்பந்தமில்லாத ஒரு நபரை எப்படி தொடர்புபடுத்த முடியும்? உதாரணத்துக்கு நீங்கள் என்னிடம் கேள்வி கேட்டால் உங்கள் மேல் எப்படி ED விசாரணைக்கு வர முடியும்? வர முடியாது. அதனால் யாருக்கு சம்பந்தம் இருக்கிறதோ அவர்களுக்கு மட்டும்தான் விசாரணை வரும்” என்று தெரிவித்தார்.
