பிரதமர் மோடியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் 1008 பசுக்களுக்கு கோ பூஜை நடத்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார். நாடு முழுவதும் கோயில்களில் வழிபாடு செய்வது, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்குவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது என பாஜகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் மோடியின் 75வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் 1008 பசுக்களுக்கு கோ பூஜை நடத்தப்பட உள்ளது.
‘விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் – புதுச்சேரி இடையில் ஓமந்தூர் பகுதியில் உள்ள பாஜக பிரமுகர் முரளிக்கு சொந்தமான சிபிஎஸ்இ பள்ளியில் காலை 9 மணிக்கு இந்த பூஜை நடைபெறுகிறது.
முப்பத்து முக்கோடி தேவர்களை வணங்கி 1008 பசுக்களுக்கு கோபூஜையும், 75 பெண்களுக்கு கன்றுடன் தலா ஒரு பசுவும் வழங்கப்பட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டு வருகிறார். இவ்விழாவில் அதிமுக விழுப்புரம் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சிவி சண்முகம் கலந்துகொண்டு பிரதமர் மோடியை வாழ்த்தி பேசவுள்ளார்.
இந்த பூஜையில் பாஜக பிரமுகர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்’ என்கிறார்கள் தமிழக பாஜக வட்டாரத்தில்.
சமீபத்தில் திண்டிவனத்தில் உள்ள சி.வி சண்முகம் வீட்டுக்கு நயினார் நாகேந்திரன் சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.