என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் யாருடைய மனதும் புண்படக் கூடாது என்று நினைப்பவன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் சமீபத்தில் சேலத்தில் நடத்திய மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய போது திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம் தெரிவித்தார்.
நயினார் நாகேந்திரன், விஜய்யை “அரசியல் அனுபவமில்லாதவர்” என்று கூறி, “முதலில் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டும். திரிஷா வீட்டிலிருந்து வெளியே வர வேண்டும். குடும்பத்துடன் நல்லுறவு வைத்திருக்க வேண்டும்” என்று தனிப்பட்ட வாழ்க்கையை இழுத்து பேசினார். மேலும், “விஜய் ஒரு ஆளே இல்லை. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற மாட்டார்” என்றும் கூறினார். இந்தக் கருத்துக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. திமுக எம்.பி. கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் போன்றோர் “அநாகரிகமான, பெண்களை இழிவுபடுத்தும் பேச்சு” என்று கடுமையாக விமர்சித்தனர். பாமக நிறுவனர் ராமதாஸ் “நயினார் நாகேந்திரன் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இந்நிலையில், இன்று (பிப்ரவரி 16, 2026) மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரனிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ராமதாஸ் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியது குறித்த கேள்விக்கு, “என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் யாருடைய மனதும் புண்படக் கூடாது என்று நினைப்பவன். அவ்வளவுதான். என தெரிவித்தார்.
“மேலும், விஜய் பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், சிபிஐ விசாரணைக்குப் பிறகு விமர்சனத்தை குறைத்திருப்பது குறித்த கேள்விக்கு,”கரூரில் 41 பேர் இறந்தார்கள். அதற்கு தமிழக அரசும், மதிப்பிற்குரிய விஜயும் காரணம். 12 மணிக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு 7 மணிக்கு வருகிறார். குடிப்பதற்கு தண்ணீர் கூட ஏற்பாடு செய்யவில்லை. இப்போது கூட சேலத்தில் ஒருவர் இறந்துவிட்டார். நல்ல சகுனம்தானே இது அவர்களுக்கு” என்று கூறி சிரித்தார்.
