தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (செப்டம்பர் 27) சந்தித்து பேசினார்.
கோவையைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் துணை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் தமிழகத்திலிருந்து பாஜக, அதிமுக தலைவர்கள் டெல்லி சென்று சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்தவர் நாட்டின் உயரிய பதவியை வகிக்கும் நிலையில், துணை குடியரசுத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு வரும் அக்டோபர் 4ஆம் தேதி தமிழக பாஜக சார்பில் பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் பாராட்டு விழாவில், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய முக்கிய விஐபிக்கள் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
கலைவாணர் அரங்கத்தில் கட்சி பெயரில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கேட்டால் கொடுக்கமாட்டார்கள். ஒரு அறக்கட்டளை பெயரில் கேட்டால் தான் வாடகைக்கு கொடுப்பார்கள்.
இதனால் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் அறக்கட்டளை பெயரில் பணம் செலுத்தி அரங்கை புக் செய்திருக்கிறார்கள்.

இந்தநிகழ்ச்சிக்காகத்தான் ஆளுநரை சந்தித்து நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். அப்போது பாஜக மாநில துணைத் தலைவர்கள் சக்கரவர்த்தி, கரு நாகராஜன் பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் ஆகியோரும் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பில் ஆளுநரிடம் நயினார் நாகேந்திரன் என்ன பேசினார் என்று பாஜக தரப்பில் விசாரித்தபோது, ‘இந்த சந்திப்பின் போது ஆளுநருடன் நயினார் நாகேந்திரன் மட்டும் தனியாக சுமார் 1 மணி நேரம் பேசினார்.
அப்போது, அதிமுகவில் நிலவும் குழப்பங்கள்… ஓபிஎஸை ஏன் எடப்பாடி பழனிசாமி சேர்க்க மறுக்கிறார், விஜய்யின் அரசியல் பயணம்… அவருக்கும் கூடும் கூட்டம் உள்ளிட்ட தமிழக அரசியல் நிலவரம் பற்றி கேட்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதை கேட்ட நயினார், இதுதொடர்பான தனது அரசியல் கருத்துகளை ஆளுநரிடம் தெரிவித்தார்’ என்கிறார்கள்.
இந்நிலையில் ஆளுநருடனான சந்திப்பு குறித்த புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள நயினார் நாகேந்திரன் மரியாதை நிமித்தமாக சந்தித்தாக பதிவிட்டுள்ளார்.
முன்னதாக திண்டிவனத்தில் நயினார் நாகேந்திரன் தலைமையில் பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு கோ பூஜை நடத்தப்படவிருந்தது. ஆனால் ஆளுநர் ரவி, நயினாரை சந்திக்க நேரம் ஒதுக்கியதால், அந்நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ளவில்லை.அவருக்கு பதிலாக கேசவ விநாயகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.