நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை கையாள தெரியவில்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அதிமுக மூத்த தலைவரான செங்கோட்டையன், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
செங்கோட்டையனின் கருத்தை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சசிகலா ஆகியோர் வரவேற்பு தெரிவித்தனர்.
இந்தநிலையில் இன்று (செப்டம்பர் 6) மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, “ ஓபிஎஸ் விவகாரத்தில் தேஜகூவில் இருந்து வெளியேற யார் காரணமானவர்களோ அவர்கள் பேச வேண்டும் என்று பலமுறை சொன்னேன். அதற்கு எந்த ரியாக்ஷனும் இல்லை” என்றவரிடம்,
தேஜகூவில் இருந்து வெளியேற எடப்பாடி பழனிசாமி காரணமா? என்ற கேள்விக்கு, “அவர் எப்படி காரணமாக இருப்பார்.
எங்களுக்கு ஒருவரின் இணக்கம் தேவையில்லை. யாரை எதிர்த்து நான் கட்சி ஆரம்பித்தேன் என்று அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது நான் எதற்காக காத்திருக்க வேண்டும். அப்படிதான் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் ஆக வேண்டும் என்று நினைக்கக் கூடிய கூட்டம் எங்கள் கூட்டமல்ல” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “அண்ணாமலை இருந்தவரை கூட்டணியை நன்றாக கையாண்டார். ஆனால் நயினார் நாகேந்திரன் அப்படியில்லை. ஓபிஎஸ் விவகாரத்தில் நான் நாயினாரிடம் போனில் பேசினேன். ஓபிஎஸ் உங்களுக்கு போன் செய்திருக்கிறார்… மெசேஜ் செய்திருக்கிறார். ஆனால் நீங்கள் இல்லை என்று சொல்கிறீர்களே… என்ன நயினார்? என்று கேட்டேன்.
இல்லை…இல்லை… என்று சமாளித்தார். ஓபிஎஸ் வேறு வழியில்லாமல் அந்த போன் கால், மெசேஜ் டீடெய்ல்ஸை வெளியிட்டார். என்னிடம் கேட்டிருந்தால் என்று நயினார் ஆணவமாக பதில் சொல்லியிருக்கிறார். இதற்கு நானோ, பன்னீர் செல்வமோ கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை.
நாங்கள் வெளி வந்ததற்கு நயினாரும் காரணமில்லை… வேறு யாரும் காரணமில்லை. எங்கள் தொண்டர்களுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. அதனால் வெளியே வந்துவிட்டோம்” என தெரிவித்தார்.
மேலும் அவர், “ தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என கூறினேன். அதை தவிர அவருடன் இணையப்போகிறேன் எனக்கூறவில்லை.
அதிமுகவை சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் வேட்பாளர் ஆவதில் எங்களுக்கு பிரச்சனையும் இல்லை. அண்ணன் செங்கோட்டையன் சொன்னது போல அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அப்படியானால் தான் ஆட்சியை பிடிக்க முடியும். இல்லை என்றால் இது கனவாக போய்விடும்” என பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.