கூட்டணி ஆட்சி தொடர்பாக ஒரே கூட்டணியில் உள்ள அதிமுக – பாஜகவினர் இடையே தொடர்ந்து கருத்து மோதல் நிலவி வருகிறது. அதே போன்று ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரன் இருவரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளார்களா என்பதிலும் குழப்பம் உள்ளது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியும் ஒரே விமானத்தில் (Indigo 6E237) இன்று (ஆகஸ்ட் 12) மாலை கோவைக்கு சென்றனர்.
அங்கு 6.45 மணியளவில் விமானம் இறங்கியதும் எஸ்.பி. வேலுமணி தனது காரில் புறப்பட்டு சென்று விட்டார்.
அதன்பின்னர் விமான நிலையத்தில் நயினார் நாகேந்திரன் தனது கட்சியினருடன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, உங்கள் கூட்டணிக்கு ஓபிஎஸ் வருவாரா? மாட்டாரா ? பாஜக, டிடிவி தினகரன் மூலம் ஓபிஎஸ்ஐ கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கு முயற்சி எடுத்து இருப்பதாக தெரிகிறதே என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு, “அப்படி வந்தால் எனக்கு சந்தோசம் தான். டிடிவி தினகரனிடம் நான் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன். அவரும் என்னுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறார். அவர் எங்கள் கூட்டணியில் தான் இருக்கிறார். நீங்கள் நினைப்பது போல அனைவரும் வெகுவிரைவில் தேர்தலுக்கு முன் ஒரே மேடையில் ஏறுவோம்” என்றார்.
ஆனால் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வரும் எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரனுடைய பெயரையோ அவருடைய கட்சியின் பெயரையோ எங்கேயும் சொல்வதில்லையே என மற்றொரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு நயினார், “முறையாக சில ஏற்பாடுகள் எல்லாம் முடிந்த பிறகு, அனைவருடைய பெயரையும் எடப்பாடி சொல்வார்” என தெரிவித்தார்.
தொடர்ந்து அவர், ”திமுக ஆட்சியில், கடந்த பாராளுமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியிட்டபோது நிறைய வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து எடுத்து இருந்தார்கள்.
திமுக கூட்டணி வலுவாக இருப்பது போல ஒரு மாயையை உருவாக்கியிருக்கிறார்கள். தோல்வி பயத்தில் இருக்கிறார்கள்.
மக்கள் மீது சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு, தினசரி நடைபெறுகின்ற படுகொலைகள், கஞ்சா கடத்தல், போதை பொருள் நடமாட்டம் என அனைத்து இடங்களிலும் அதிகமாக இருக்கிறது.
எங்கள் கூட்டணி வெல்லும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்” என நயினார் பதிலளித்தார். அதன்பின்னர் காரில் ஏறி பாலக்காடு நோக்கி புறப்பட்டு சென்றார்.