’நாற்பது வருஷங்களுக்கும் மேலா ஒருத்தர் அதே இளமையோட இருக்கறது ஆச்சர்யம்தான்’ என்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தால் ‘கூலி’ பட விழாவில் பாராட்டப்பட்டவர் நடிகர் நாகார்ஜுனா. தெலுங்கு திரைப்பட ரசிகர்களால் ‘கிங்’ என்று அழைக்கப்படும் இவர் தற்போதைய இளம் நடிகர்களின் பிட்னெஸுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.
’விக்ரம்’ எனும் தெலுங்கு படம் வழியே நாயகனாக அறிமுகமான நாகார்ஜுனா ‘மஜ்னு’, ‘ஆஹரி போராட்டம்’, ‘ஜானகி ராமுடு’, ‘கீதாஞ்சலி’ படங்கள் வழியே புகழ் பெற்றிருந்தாலும், அவருக்கென்று தனிப்பட்ட ரசிகர் வட்டத்தைப் பெருகச் செய்த படம் ‘சிவா’. தமிழில் ‘உதயம்’ என்ற பெயரில் ‘டப்’ செய்யப்பட்டு இது ஹிட்டானது. இதனை இயக்கியவர் ராம்கோபால் வர்மா.
சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு ‘4கே’ தரத்தில், டால்பி அட்மோஸ் ஒலியமைப்பில் இப்படம் புதுப்பொலிவினைப் பெறவிருக்கிறது. நாகார்ஜுனாவின் சகோதரர் வெங்கட் இதனை வெளியிடவிருக்கிறார்.

”36 ஆண்டுகளுக்குப் பிறகும் சிவா ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக இருந்து வருகிறது. அதனால், இந்த கல்ட்கிளாசிக்கை மீண்டும் அவர்களது பார்வைக்கு முன்வைப்பது என்ற முடிவினை நானும் எனது சகோதரரும் எடுத்திருக்கிறோம். இப்போதைய ரசிகர்கள் அந்த பிரமாண்டத்தைப் பெரிய திரையில் உணர வேண்டும் என விரும்புகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
இன்றும் ‘சிவா’ படத்தின் ஒவ்வொரு காட்சியையும் பாத்திரத்தையும் ரசிகர்கள் நினைவுகூர்வது தனக்கு ஆச்சர்யம் அளிப்பதாகத் தெரிவித்திருக்கிறார் இயக்குனர் ராம்கோபால் வர்மா.
“ஏஐ நுட்பத்தில் இப்படத்தின் மோனோ மிக்ஸ் ‘டால்பி அட்மோஸ்’ தரத்திற்கு மாறவிருக்கிறது. அன்னபூர்ணா ஸ்டூடியோஸீன் இந்த முடிவு என்னை உற்சாகமாக்கியிருக்கிறது. சிவாவை இதற்கு முன்னர் யாரும் இப்படிப் பார்த்திருக்க முடியாது” என்று புகழ்ந்திருக்கிறார்.
நாகார்ஜுனாவின் குடும்ப நிறுவனமான ‘அன்னபூர்ணா ஸ்டூடியோஸ்’ 50வது ஆண்டை நிறைவு செய்கிற சூழலில் ‘சிவா’வின் வரவு தெலுங்கு திரையுலகில் நிச்சயம் புத்துணர்வை ஏற்படுத்தும்.
இப்படத்தின் ‘ரீரிலீஸ்’ ட்ரெய்லர் வரும் 14ஆம் தேதி முதல் ‘கூலி’ படத்தோடு இணைந்து தியேட்டர்களில் வெளியாகிறதாம்.. அப்படிப் போடு..!