பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து மாநில ஆளுநருமான இல.கணேசன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று (ஆகஸ்ட் 8) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாஜகவில் மாநில தலைவர், தேசிய செயலாளர், தேசிய துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் இல கணேசன். தற்போத் 80 வயதான இவர் தற்போது நாகாலாந்து மாநில ஆளுநராக பணியாற்றி வருகிறார்.
இவர் சென்னை தியாகராய நகரில் உள்ள தனது வீட்டுக்கு அவ்வப்போது வந்து செல்வது வழக்கம். அந்த வகையில், அண்மையில் தனது வீட்டுக்கு இல.கணேசன் வந்திருந்தார்.
இந்நிலையில், இன்று காலை தனது வீட்டில் அவர் வழுக்கி விழுந்ததாக தெரிகிறது. இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டதாக கூறப்படும் நிலையில் உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு ஐசியு பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.