தன்னிடமிருந்து வாகனம் பறிக்கப்பட்டது குறித்து டிஎஸ்பி சுந்தரேசன் பேட்டி அளித்துள்ளார். myladuthurai dsp sundaresan pressmeet
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பியாக பணிபுரிந்து வருபவர் சுந்தரேசன். இவருக்கு அரசு சார்பில் பொலிரோ வாகனம் வழங்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் சுந்தரேசனுக்கு வழங்கப்பட்ட வாகனத்தை எந்த காரணமும் தெரிவிக்காமல் அரசு திரும்ப பெற்றதாக தகவல்கள் வந்தன. இதற்கு மறுப்புத் தெரிவித்த மாவட்ட காவல்துறை, டிஎஸ்பி சுந்தரேசனுக்கு வேறு வாகனம் வழங்கப்பட்டதாக தெரிவித்தது.
இந்தநிலையில், டிஎஸ்பி சுந்தரேசன் மயிலாடுதுறையில் இன்று (ஜூலை 17) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “நான் 1996 பேட்ச் அதிகாரி. 30 ஆண்டுகளாக காவல்துறையில் பணியாற்றி வருகிறேன். என்னுடைய பணியில் அதிகாரிகளிடம் நல்ல மதிப்பை பெற்றிருக்கிறேன். பல முக்கிய வழக்குகளை நான் விசாரித்திருக்கிறேன்.
நான் தற்போது மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். என்னுடைய உயர் அதிகாரிகள் என்னை குறி வைக்கிறார்கள்.
நான் காஞ்சிபுரம் மாவட்டம் சிவகாஞ்சி காவல்நிலையத்தில் பணியாற்றிய போது, கஸ்தூரி என்ற முன்னாள் காவல்துறை அதிகாரி மரண வழக்கை விசாரித்து, இதில் போலீஸ் சித்ரவதை உண்டு. சில போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று மனித உரிமை ஆணைய மாநில தலைவர் மணிக்குமாருக்கு அறிக்கை அனுப்பினேன்.
இந்த அறிக்கையை அவர் அரசாங்கத்துக்கு அனுப்பினார். உடனடியாக என்னை பணியிட மாற்றம் செய்தார்கள். இதற்கு மனித உரிமை ஆணைய தலைவரும் எதிர்ப்புத் தெரிவித்தார். பின்னர் அவருக்கும் நெருக்கடி கொடுக்கப்பட்டது.
அதன்பிறகு என்னை மயிலாடுதுறைக்கு மாற்றினார்கள். எனக்கு பல்வேறு மெமோ வருகிறது. அதற்கும் நான் பதிலளித்து கொண்டிருக்கிறேன்.
இன்று மாவட்ட கண்காணிப்பாளர் ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறார். வாகனம் என்னிடம் இருந்து பறிக்கப்படவில்லை என்றும் தவறான தகவல்களை போட வேண்டாம் என்றும் சொல்கிறார். இதெல்லாம் வேதனையாக இருக்கிறது.
கடந்த 5.7.2025 அன்று பொலிரோ வாகனத்தில் எனது டிரைவர் வடிவேலுவும் இருக்கிறார். அப்போது ஏஆர்எஸ்ஐ செந்தில்குமார் , அமைச்சர் மெய்யநாதனின் எஸ்கார்டுக்கு வண்டி வேண்டும் என்று கேட்டார்.
ஆனால் ப்ரோட்டோகால்படி வண்டியை கொடுக்க முடியாது. அப்படி வேண்டும் என்றால் உத்தரவு போடுங்கள் நான் கொடுக்கிறேன் என்றேன்.
அதன்பிறகு 2 மணி நேரம் கழித்து 2008 பேட்ச்சில் வந்த எஸ்.பி இன்ஸ்பெக்டர், 1996ல் பேட்சில் வந்த என்னிடம், நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ… அங்கேயே இருந்துகொண்டு வண்டியை மட்டும் அனுப்புங்கள் என்றார்.
அவரிடமும் மேல் அதிகாரிகள் சொல்லாமலும் உத்தரவு இல்லாமலும் என்னால் அனுப்பமுடியாது என்று சொல்லிவிட்டேன்.
அடுத்த 10 நிமிடத்தில் கண்ட்ரோல் ரூமில் இருந்து நாகராஜ் என்பவர் எனக்கு கட்டளையிடுகிறார். திருச்செந்தூருக்கு பாதுகாப்புப் பணிக்காக செல்லுமாறு கூறினார். இதனால் முருகன் கூப்பிடுகிறார் என்று நினைத்துக்கொண்டு, எந்த வாகனத்தை கேட்டார்களோ அந்த வாகனத்தில் திருச்செந்தூர் சென்றேன்.
நான் திருச்செந்தூரில் இருக்கும்போதே, திருவாரூருக்கு முதல்வரின் பந்தபோஸ்துக்கு செல்ல வேண்டும் என்று எஸ்,பி அலுவலகத்தில் இருந்து ஒரு உத்தரவு வந்தது. இதையடுத்து திருவாரூருக்கு சென்றுவிட்டு 10ஆம் தேதி வீட்டுக்கு வந்து இறங்கக்கூட இல்லை, அமைச்சரின் எஸ்கார்டுக்கு போக வேண்டும் என்று வண்டி கேட்டார்கள்.
மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கேட்டதால் ஏஆர்எஸ்ஐயிடம் வண்டியை கொடுத்தேன். ஆனால் அமைச்சரின் எஸ்கார்டுக்கு வண்டி போகவில்லை. வண்டியை ஒரமாக நிறுத்திவைத்துவிட்டார்கள்.
10ஆம் தேதியில் இருந்து என்னிடம் வண்டியில்லை. 11ஆம் தேதி மாவட்ட எஸ்.பி.க்கு தகவல் தெரிவித்தேன். எல்லாம் என்னிடம் ரெக்கார்டு இருக்கிறது.
வண்டி இல்லை என்று சொன்ன பிறகு ஓடவே முடியாத ஒரு வண்டியை கொடுத்தனர். இந்த வண்டியை பயன்படுத்தவே முடியாது என்று என்னுடைய டிரைவர் சொன்னார்.
அன்று இரவு ரோந்து பணிக்கு அனுப்பினார்கள். அந்த வண்டியை எடுத்துக்கொண்டு சென்ற போது கொள்ளிடம் அருகே நின்றுவிட்டது. வண்டியில் இருந்து புகையாய் வந்தது. இதுகுறித்து கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் தெரிவித்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவர்களுக்கு வேண்டுமானால் என் உயிர் முக்கியமில்லாமல் இருக்கலாம். ஆனால் என் குடும்பத்துக்கு என் உயிர் முக்கியம். இருந்தாலும் அன்றிரவு ரோந்து பணியை மேற்கொண்டு அடுத்த நாள் கண்ட்ரோல் ரூம் அலுவலகத்துக்கு சென்று வண்டியை விட்டுவிட்டேன்.
அதன்பிறகு பைக்கில் அலுவலகத்துக்கு போனேன். இதெல்லாம் அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி வரை தெரியும்” என்றார்.
மேலும் அவர், “ஆய்வாளர் பாலச்சந்திரன் என ஒருவர் இருக்கிறார். இவர் ஒரு நேர்மையற்ற அதிகாரி. இது மயிலாடுதுறை மக்களுக்கு தெரியும். அவர் எஸ்.பி.க்கு தவறான தகவலை தருகிறார்.
நான் 1300 வழக்குகள் பதிவு செய்து 700 பேரை ரிமாண்ட் செய்திருக்கிறேன். இப்படிப்பட்ட என்னை போன்றவர்களிடம் நேர்மையாக பணி வாங்காமல், தண்டனை கொடுக்கிறார்கள். இதுபோன்ற எஸ்.பி மற்றும் இன்ஸ்பெக்டரை தண்டிக்க வேண்டும். இவர்கள் போன்றவர்கள் இருக்கும் வரை பொதுமக்களுக்கே பாதுகாப்பு இல்லை. அரசுக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்துவதே இதுபோன்ற அதிகாரிகள்தான்.
நான் மனித உரிமை ஆணையத்தில் பணியாற்றிய போதும் என்னை பலி வாங்கினார்கள். இப்போதும் பலி வாங்குகிறார்கள். அடிமட்டத்தில் இருந்து டார்ச்சர் செய்கிறார்கள். என்னை சஸ்பெண்ட் செய்தாலும் பரவாயில்லை.
இதற்கு பின்னர் இரண்டு உயர் அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் உளவுத்துறை ஐஜி செந்தில் வேல், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் தான். மயிலாடுதுறை எஸ்.பி என்னை அழைத்து பேசுகிறார். நடுவிரலை காட்டி, நேராக இருக்கும் விரல் வளைந்து போகவேண்டுமாம். இல்லை என்றால் உடைத்துவிடுவார்கள் என்கிறார். நேர்மைக்கு சவால் விடுகிறார்.
இந்த விஷயத்தையெல்லாம் ஏன் பெரிதாக்குகிறீர்கள். உங்களிடம் எந்த பிரச்சினை வராது என்கிறார். இதெல்லாம் எந்தவிதத்தில் நியாயம்?” என்று கேள்வி எழுப்பினார். myladuthurai dsp sundaresan pressmeet