கேரளா போன்ற ஒரு மாநிலத்தை அவமதிக்கும் ஒரு படத்தை தேசிய மரியாதைக்கு எவ்வாறு பரிசீலிக்க முடியும் என கேள்வி எழுப்பியும் பயனில்லை என தேசிய விருதுக்கான நடுவர் மன்ற குழுவில் இடம்பெற்ற பிரதீப் நாயர் வேதனை தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான 71வது தேசிய திரைப்பட விருது மத்திய அரசு சார்பில் நேற்று (ஆகஸ்ட் 1) அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகர் முதல் சிறந்த ஆவணப்படம் வரை என அனைத்து பிரிவுகளுக்கும் விருது வழங்கப்பட்டது.
எனினும் கேரள இந்துப் பெண்கள், முஸ்லிம்களாக மதமாற்றம் செய்யப்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேர்க்கப்படுவதாக உருவாக்கப்பட்ட சர்ச்சைக்குரிய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு – சிறந்த இயக்கம் (சுதிப்தோ சென்) மற்றும் சிறந்த ஒளிப்பதிவு (பிரசந்தனு மொஹபத்ரா) இரண்டு முக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ப்ரித்விராஜ் சுகுமாரன் நடித்த பிளெஸ்ஸியின் மிகவும் கொண்டாடப்பட்ட திரைப்படமான ‘ஆடுஜீவிதம்’ (தி கோட் லைஃப்) பல பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அதற்கு ஒரு விருதுகள் கூட அறிவிக்கப்படவில்லை.
மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டிற்கு எதிராக கேரள முதல்வர் பினராயி விஜயன் முதல் திரையுலக பிரபலங்கள், விமர்சகர்கள், ரசிகர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, 71வது தேசிய திரைப்பட விருது நடுவர் கமிட்டியில் உறுப்பினராக இருந்த திரைப்படத் தயாரிப்பாளர் பிரதீப் நாயர் ஆன் மனோரமா இணையளத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், ‘இந்தியாவில் நிலவும் ஒரு பெரிய சமூகப் பிரச்சினை’ என்பதை அடிப்படையாகக் கொண்டு தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை நடுவர் மன்றம் தேர்ந்தெடுத்ததாக கூறியுள்ளார்.
மேலும், “மொத்தம் திரைப்படப் பிரிவிற்கான 11 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய குழுவில் நான் ஒருவன் மட்டுமே மலையாளி. ‘தி கேரளா ஸ்டோரி’ தேசிய விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, நான் அதை கடுமையாக எதிர்த்தேன். ’கேரளா போன்ற ஒரு மாநிலத்தை அவமதிக்கும் மற்றும் பிரச்சாரமாக செயல்படும் ஒரு படத்தை தேசிய மரியாதைக்கு எவ்வாறு பரிசீலிக்க முடியும்?’ என்று நான் கேள்வி எழுப்பினேன். எனது ஆட்சேபனையை நடுவர் குழுத் தலைவரிடம் அசுதோஷ் கோவரிகரிடம் நேரடியாகத் தெரிவித்தேன்.
ஆனால் மற்ற 10 பேரும் அப்படத்தை நாட்டின் முக்கிய சமூகப் பிரச்சினையை கையாண்டதாக வாதிட்டனர். இன்னும் சொல்லப்போனால் ’சிறந்த இயக்கம்’ பிரிவுக்கான போட்டியில், ‘தி கேரளா ஸ்டோரி’யை சமூகத்திற்கு தேவையான கட்டாய படம் என்றும், ‘உள்ளொழுக்கு’ திரைப்படத்தை வெறும் ஒரு குடும்ப நாடகக் கதை என்றும் சில நடுவர் உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். இறுதியில் பெரும்பான்மை வாக்கெடுப்பின்படி தி கேரளா ஸ்டோரிக்கு 2 விருதுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

பிளெஸ்ஸின் ஆடு ஜீவிதம் திரைப்படம் குறித்து கூறுகையில், “ஆடு ஜீவிதம் சிறந்த பின்னணிப் பாடகர் மற்றும் சிறந்த பாடல் வரிகள் (ரஃபீக் அகமதுவின் “பெரியோனே ரஹ்மானே” பாடலுக்காக) உள்ளிட்ட பிரிவுகளுக்கும் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர்கள் பாடல் வரிகளின் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பைச் சமர்ப்பிக்கத் தவறிவிட்டனர். நானே மொழிபெயர்ப்பு செய்ய முயற்சித்தும் பார்த்தேன். இது தொழில்நுட்பக் குறைபாடு.
அதேவேளையில் ‘உள்ளொழுக்கு’ திரைப்படம் எழுத்து முதல் இயக்கம் மற்றும் தொழில்நுட்பம் என அதன் ஒவ்வொரு கூறுகளும் பாராட்டப்பட்டன, அதனால்தான் அது சிறந்த மலையாளப் படமாக தேர்வானது. என்று நாயர் கூறினார்.

இந்தப் படம் சிறந்த அறிமுக இயக்குனர் (கிறிஸ்டோ டோமி), சிறந்த நடிகை (பார்வதி திருவோத்து), சிறந்த பின்னணி இசையமைப்பாளர் (சுஷின் ஷியாம்) மற்றும் சிறந்த ஒளிப்பதிவு (ஷெஹ்னாத் ஜலால்) ஆகிய பிரிவுகளுக்கும் பரிசீலிக்கப்பட்டது.
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு பிரிவில் உள்ளொழுக்கு மற்றும் ஜூட் அந்தனி ஜோசப்பின் ‘2018: எவ்ரிஒன் இஸ் எ ஹீரோ’ மட்டுமே போட்டியிட்டன. இதில் ‘2018’ நடுவர் அனைவரின் வாக்குகளுடன் வென்றது.

‘2018’ சிறந்த ஆரோக்கியமான பொழுதுபோக்கு திரைப்படம் என்ற பிரிவிலும் போட்டியிட்டது. ஆனால், அதன் உணர்ச்சிபூர்வமான திரைக்கதை மற்றும் பிராந்திய தனித்தன்மை காரணமாக நிராகரிக்கப்பட்டது. படம் சக்திவாய்ந்ததாக இருந்தாலும், பாடல்கள் அல்லது இலகுவான தருணங்கள் போன்ற முக்கிய பொழுதுபோக்கு கூறுகள் இல்லை என்றும், முதன்மையாக 2018 கேரள வெள்ளத்தை நன்கு அறிந்த பார்வையாளர்களுக்கு மட்டுமே தொடர்புடையது என்றும் நடுவர் மன்றம் நிராகரித்தது.
சிறந்த ஒப்பனைக்காக, ‘பூக்களம்’ மற்றும் ‘ஆடுஜீவிதம்’ ஆகியவை போட்டியில் இருந்தன.
‘பூக்களம்’ திரைப்படத்தின் ஒப்பனை ஒரு கதாபாத்திரத்தை (விஜயராகவன்) மையமாகக் கொண்டிருந்ததால் தோல்வியடைந்தது, அதே நேரத்தில் ‘ஆடுஜீவிதம்’ அதன் ஒட்டுமொத்த ஸ்டைலிங் மூலம் ஈர்க்கத் தவறியது. சர்வதேச அளவில் வரலாற்று கதாபாத்திரங்களை மீண்டும் உருவாக்கியதற்காக இந்தி மொழி திரைப்படமான ‘சாம் பகதூர்’ விருதுக்கு தகுதி பெற்றது” என பிரதீப் நாயர் தெரிவித்துள்ளார்.