கரூரில் மட்டும் ஏன் இப்படி?… முதல்வருக்கு சவால்: விஜய் பேச்சு!

Published On:

| By Kavi

என் வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு வலி நிறைந்த சூழ்நிலையை எதிர்கொண்டது கிடையாது என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டத்தில், அதிகளவு மக்கள் கூடியதால் பெருந்துயரம் ஏற்பட்டது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக ஒரு எக்ஸ் பதிவை மட்டும் போட்டுவிட்டு, இதுவரை விஜய் எதுவும் பேசாமல் இருந்த நிலையில் இன்று (செப்டம்பர் 30) பிற்பகல் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், “என் வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு வலி நிறைந்த சூழ்நிலையை எதிர்கொண்டது கிடையாது. மனசு முழுக்க வலி… வலி மட்டும் தான் .

ADVERTISEMENT

இந்த சுற்றுப்பயணத்தில் என்னை மக்கள் பார்க்க வருகிறார்கள். இதற்கு ஒரே ஒரு காரணம் தான், மக்கள் என் மீது வைத்திருக்கும் அன்பும் பாசமும் தான்.

அந்த அன்புக்கும் பாசத்துக்கும் நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த சுற்றுப்பயணத்தில் மற்ற எல்லா விஷயங்களையும் தாண்டி, மக்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் இருக்கக்கூடாது என்பது எப்போதும் என் மனதில் ஆழமாக இருக்கும்.

ADVERTISEMENT

அதனால் தான் இந்த அரசியல் காரணங்கள் எல்லாவற்றையும் தவிர்த்துவிட்டு, மக்களுடைய பாதுகாப்பை மட்டும் கருத்தில் கொண்டு அதற்காக பல இடங்களை பார்த்து , தேர்வு செய்து காவல்துறையிடம் கோரிக்கை வைப்போம்.

ஆனால் நடக்ககூடாதது நடந்துவிட்டது. நானும் மனிதன் தானே அந்த நேரத்தில், அத்தனை பேர் பாதிக்கப்பட்டிருந்தபோது என்னால் எப்படி அந்த ஊரை விட்டு கிளம்பி வரமுடியும். திரும்ப போக வேண்டுமென்று இருந்தால் அதை ஒரு காரணம் காட்டி பதற்றமான சூழ்நிலைகள், வேறு சில அசம்பாவிதங்கள் எதும் நடந்துவிடக் கூடாது என்பதால் தான் அதை தவிர்த்துவிட்டேன்.

இந்த நேரத்தில் சொந்தங்களை இழந்து தவிக்கும் அத்தனை பேரின் குடும்பங்களுக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். என்ன சொன்னாலும் அந்த இழப்புக்கு ஈடாகாது என்று எனக்குத் தெரியும்.

மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிற அனைவரும் விரைவில் குணமாகி வர வேண்டும். கூடிய சீக்கிரமே உங்கள் எல்லோரையும் நான் சந்திக்கிறேன்.

இந்த நேரத்தில் எங்களுடைய நிலையை புரிந்துகொண்டு எங்களுக்கு ஆதரவாக பேசிய அரசியல் கட்சிகளை சார்ந்த நண்பர்கள், தலைவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

கிட்டதிட்ட 5 மாவட்டங்களுக்கு பிரச்சாரத்துக்கு போனோம். அங்கு இதுபோன்று எதுவும் நடக்கவில்லை. கரூரில் மட்டும் ஏன் நடக்கிறது. எதற்கு நடக்கிறது. மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும்.

மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். கரூரை சேர்ந்த மக்கள் உண்மையெல்லாம் சொல்லும் போது கடவுளே நேரில் இறங்கி வந்து சொல்வது போல் இருக்கிறது. சீக்கிரம் அனைத்து உண்மைகளும் வெளியில் வரும்.

எங்களுக்கு தரப்பட்ட இடத்தில் போய் பேசிக்கொண்டிருந்தோம். அதைத்தவிர நாங்கள் எதுவும் செய்யவில்லை. இருந்தாலும் எங்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தோழர்கள் மீதும், சமூக மீடியாக்களில் இருக்கும் தோழர்கள் நண்பர்கள் மீதும் எப்.ஐ.ஆர் போட்டிருக்கிறார்கள்.

சி.எம்.சார் உங்களுக்கு ஏதாவது பழி வாங்கும் எண்ணம் இருந்தால் என்னை எதுவேண்டுமானாலும் செய்யுங்கள். அவர்கள் மீது கை வைக்காதீர்கள். நான் வீட்டிலோ, ஆபிசிலோதான் இருப்பேன். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.

நண்பர்களே, தோழர்களே நம்முடைய அரசியல் பயணம் இன்னும் வலிமையாகவும், தைரியத்தோடும் தொடரும்” என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share