’அரங்கேற்றம்’ நாயகி போல.. என்னை நானே நாசமாக்கிய ‘அந்த ‘ முடிவு.. வைகோ ஓபன் டாக்

Published On:

| By Mathi

Vaiko DMK

பொடா சட்டத்தின் கீழ் தம்மை சிறையில் அடைத்த அதே ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுடன் 2006-ல் மதிமுக தேர்தல் கூட்டணி வைத்ததுதான் என் நம்பகத்தன்மையை நானே நாசமாக்கிய முடிவு என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

ஈரோட்டில் மதிமுக நிகழ்ச்சியில் வைகோ பேசியதாவது: கடந்த காலத்தில் நான் சில பிழைகளைச் செய்திருக்கிறேன். அதை நான் ஒப்புகொள்கிறேன். என் நம்பகத்தன்மையை நானே நாசமாக்கிக் கொண்டேன். My credibility was totally destroyed. என்னுடைய அரசியல் வாழ்வின் நம்பகத்தன்மையை சுக்குநூறாகியது.

ADVERTISEMENT

எந்த அண்ணா திமுக பொதுச்செயலாளர் 19 மாதம் சிறையில் அடைத்தாரோ, அதே அண்ணா திமுகவோடு (2002-ம் ஆண்டு திருமங்கலம் பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக அதிமுக ஆட்சியில் பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டார். 19 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த வைகோ 2004-ல் விடுதலை செய்யப்பட்டார்; 2006-ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் வைகோ இடம் பெறுவது உறுதியான நிலையில் திடீரென ஜெயலலிதா தலைமையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது மதிமுக) உடன்பாடு வைத்ததைப் போன்ற ஒரு பிழையான, தவறான, மன்னிக்க முடியாத ஒரு முடிவு எடுத்திருக்கவே முடியாது.

ஆனால் அந்த முடிவை எடுப்பதற்கு என்னோடு இருந்த தலைமை நிர்வாகிகள் அனைவருமே – இன்று நம்மை விட்டு விலகிச் சென்றிருந்தாலும், தொழிலாளர் அணிக்குத் தலைவராக இருந்தவரும் மூத்தவருமான அந்த அண்ணன் உட்பட அனைவருமே – நாம் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு கூட்டணி அமைத்தால் ஒரு இடம் கூட ஜெயிக்க முடியாது, 205 தொகுதிகளிலே அண்ணா திமுக ஜெயிக்கப் போகிறது, அவர்களோடு கூட்டு வைத்தால் 25 எம்.எல்.ஏ-க்களுக்கு குறையாமல் நாம் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் பிரவேசிக்கலாம், கட்சிக்கு புத்துயிர் வரும், கட்சியை வளர்க்க முடியும் என்று சொன்னார்கள்.

ADVERTISEMENT

இதை விட்டுவிட்டால் சந்தர்ப்பம் மீண்டும் மீண்டும் நம் கதவைத் தட்டாது, இந்த வாய்ப்பை விட்டுவிட்டால் எதிர்காலமே நமக்கு கிடையாது என்று அவர்கள் ஆணித்தரமாகச் சொன்னார்கள்.

திருச்சி திமுக மாநாட்டில் பேசுவதற்கு குறிப்புகள் எழுதித் தயாராக என்னுடைய பயணப் பெட்டியிலே வைத்து, உடைகளையும் எடுத்து வைத்துவிட்டு, மலைக்கோட்டை துரித வண்டிக்குப் பயணத்தையும் உறுதி செய்துவிட்டு, இரண்டரை மணிக்கு கீழே பகல் உணவு அருந்தலாம் என்று வந்தபோது, நம்முடைய முக்கிய தலைவர்கள் தலைமை நிர்வாகி அனைவருமே ’10 நிமிடம் எங்களிடம் பேசிவிட்டுச் செல்லுங்கள்’ என்று சொன்னதனால், இந்த முடிவை எடுக்க நேர்ந்ததுக்கு நானே விளக்கம் தந்தேன்.

ADVERTISEMENT

கலை உலகிலே பிரம்மாண்டமான திரைக்காவியங்களைத் தயாரித்த பாலச்சந்தர், ‘அரங்கேற்றம்’ திரைப்படத்தில் தன் தம்பி மருத்துவக் கல்லூரியிலே படிக்க இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல் தலைவனைச் சந்திக்கச் சென்ற அந்தப் பெண் நாசமாக்கப்பட்டதால், அதற்குப் பிறகு கட்டணம் செலுத்துவதற்குப் பணம் தயாரிக்க முடியாத நிலையில் தன்னையே அழித்துக் கொண்டாள், வழிதவறிப் போனாள்.

அப்படிப்பட்ட மோசமான முடிவுக்கு ஆட்பட்டு அவள் தன்னுடைய உடல் வாணிபம் செய்து தம்பியை டாக்டராக்குவதற்குப் பாடுபட்டாளாம், கடைசியில் பைத்தியம் பிடித்தவளாக அவள் கொட்டடித்துக் கொண்டிருப்பதோடு அந்த காட்சி முடிந்துவிடும். நான் சொன்னேன், ‘அரங்கேற்றம் கதாநாயகியைப் போல நான் ஆகிவிட்டேன்’ என்று. என்னை நானே என்னுடைய நம்பகத்தன்மையை அழித்துக் கொண்டு இந்த முடிவுக்கு வந்தேன் என்று சொன்னேன்.

இன்று வரை அது எங்கோ இமயம் போல் நிமிர்ந்திருக்க வேண்டிய ரா… படுபாதாளத்துக்கு நான் போனேன். இந்த முடிவு அதனால் ஏற்பட்டது. அதற்குப் பிறகு இனி மீண்டும் அப்படி எந்த விமர்சனத்துக்கும் ஆளாகிவிடக் கூடாது.

ஒரு முடிவை எடுத்தோம். ஏனெனில் 94-ல் நான் வெளியேற்றப்பட்ட பிறகு வந்த கூட்டம் லட்சோப லட்சம் பேர். எழுச்சிப் பேரணி, குடவாசல் கூட்டமும், பத்தாயிரம் வாகனங்கள் அணிவகுக்க, எங்கு போனாலும் பல்லாயிரக்கணக்கில் – இன்றை ஒரு நடிகருக்கு வருகிற கூட்டத்தை விடப் பல மடங்கு கூட்டம் தமிழகம் எங்கும் நமக்கு வந்தது.

ஆனால் ஆற்று வெள்ளம் வந்து வடிவது போலத் தோல்விகளுக்குப் பிறகு அப்படியே வடிந்து திரும்பப் போய்விட்டது. தவறில்லை, நான் முதலிலேயே சொல்லிவிட்டேன். இது அடுத்த அக்கினிப் பரீட்சை, நடக்கப் போகிற சட்டமன்றத் தேர்தல், நடக்கப் போகிற பேச்சுவார்த்தை, நடக்கப் போகிற தொகுதிப் பங்கீடு.

இந்த அக்கினிப் பரீட்சையையும் கடந்துதான் செல்ல வேண்டியிருக்கிறது. ஆனால் முடிவெடுத்த நாளிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தோடு நாம் தோழமை கொள்வது என்று முடிவெடுத்த நாளிலிருந்து, நம் இயக்கத்தில் யாரும் ஒரு இம்மியளவும் திமுக கழகத்தையோ, ஆட்சியையோ விமர்சிக்காமல், எந்த நிபந்தனையும் விதிக்காமல் – எல்லா கட்சிகளிலும் நிபந்தனைகள் விதிக்கிறார்கள், அவர்கள் உரிமை இடங்கள் கேட்பது, ஆட்சி அதிகாரத்திலே பங்கு கேட்பது, அதெல்லாம் அவர்களுடைய உரிமை, அதிலே நான் குறைபட்டுக் கொள்ளவில்லை.

ஆனால் நாம் எடுத்த முடிவுக்குப் பிறகு எந்த விமர்சனத்தையும் முன்வைக்காமல், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்குத் குந்தகம் விளைவிக்கும் வகையிலே ஒரு வார்த்தை நான் மட்டுமல்ல எவரும் எங்கும் பேசாமல் ஒரு கூட்டணி தர்மத்தை மறுமலர்ச்சி திமுக-வைப் போலக் கடைபிடிக்கிற கட்சி தமிழ்நாட்டிலே எந்தக் கட்சியும் கிடையாது என்ற நிலை நாம் உறுதிப்படுத்தி இருக்கிறோம். அந்த நிலையிலே நாம் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு வைகோ கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share