முரசொலி செல்வம் பெயரிலான முதல் விருது மிக சரியான விருதாளருக்கு மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர் செல்வனுக்கு சென்று சேர்ந்துள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
‘முரசொலி’ நாளிதழின் நிர்வாக ஆசிரியரும், மறைந்த திமுக தலைவர் கலைஞரின் மருமகனுமான செல்வம் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி காலமானார்.

அதனைத் தொடர்ந்து அதே மாதத்தில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற முரசொலி செல்வம் பட திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ”முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு திராவிட இயக்க படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் திமுக முப்பெரும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்” என அறிவித்தார்.
அதன்படி முதல் முரசொலி செல்வம் விருது ஊடகத்துறையில் ஐம்பது ஆண்டுகால அனுபவம் பெற்ற மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வனுக்கு வழங்கப்படும் என கடந்த 9ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டம் கோடங்கிப்பட்டியில் திமுக முப்பெரும் விழா இன்று (செப்டம்பர் 17) மாலை நடைபெற்றது. விழாவில் முரசொலி அறக்கட்டளை சார்பில் மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வனுக்கு முரசொலி செல்வம் விருதை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி கெளரவித்தார்.

அப்போது முப்பெரும் விழாவில் முதன்முறையாக வழங்கப்படும் முரசொலி செல்வம் விருது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
அவர், “முரசொலி செல்வம் பெயரிலான முதல் விருது மிக சரியான விருதாளருக்கு சென்று சேர்ந்துள்ளது. விருது பெற்ற ஏ.எஸ்.பன்னீர்செல்வன் அரை நூற்றாண்டு காலம் பத்திரிகை துறையில் அனுபவம் பெற்றவர். அவர் ‘தி இந்து’, ‘பிசினஸ் இந்தியா’, ‘அவுட் லுக்’ போன்ற இந்தியாவின் தலைசிறந்த பத்திரிகைகளில் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியவர்.
இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் Reuters Fellow-ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒன்றிய – மாநில அரசு உறவுகள் பற்றி விரிவான ஆய்வை மேற்கொண்டவர். பத்து ஆண்டுகள் தெற்காசிய ஊடக வளர்ச்சி நிறுவனமான Panos South Asia-வின் நிர்வாக இயக்குநராகச் சிறப்பாக செயல்பட்டார்.
அதே காலத்தில் Global forum for Media Development- இன் துணைத் தலைவராக சிறப்பாக பணியாற்றினார்கள். இந்தியா முழுவதும் பல அடுத்த தலைமுறை இளைஞர்களை பத்திரிகையாளர்களாக உருவாக்கிய பெருமைக்கு சொந்தக்காரர்.
தற்போது, தமிழ்நாடு அரசு புதிதாக நிறுவியுள்ள சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் தலைமை இயக்குநராக சிறப்பாக பணியாற்றி வருகின்றார்.
இவை அனைத்திற்கும் மேலாக முத்தமிழறிஞர் கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை, உலகப் புகழ்பெற்ற பெங்குயின் நிறுவனத்திற்காக ஆங்கிலத்தில் “Karunanidhi-A Life” என்ற நூலை எழுதி உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர் தான் ஏ.எஸ்.பன்னீர்செல்வன்.
அவருக்கு 2025ஆம் ஆண்டிற்கான ‘முரசொலி செல்வம் விருது’ வழங்கப்படுவதில் முரசொலி அறக்கட்டளை மிகுந்த பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறது” என வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், ”இங்கு விருது பெற்றுள்ள துணை பொதுச்செயலாளர் கனிமொழி உள்ளிட்ட அத்தனை விருதாளர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
திமுகவிற்கு எத்தனையோ சிறப்புகளும், வரலாறுகளும் உண்டு. அந்த வரிசையில் கரூரில் நடைபெறும் இந்த முப்பெரும் விழாவும் இடம்பெறும். கலைஞர் முதன்முறையாக நின்று வென்ற இந்த கரூர் மாவட்டத்தில் இருந்து 2026ஆம் ஆண்டு தேர்தலுக்கான வெற்றிக் கணக்கை தொடங்குவோம்” என உதயநிதி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலினும், ”முரசொலி அறக்கட்டளை சார்பில் முரசொலி செல்வம் பெயரிலான விருதை பெற்றிருப்பவர் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளார் ஏ.எஸ்.பன்னீர் செல்வன். திராவிட இயக்கம் வலியுறுத்தி வரும் சமூக நீதியை, மானுட பற்றை, மனித உரிமை சிந்தனைகளை ஆங்கில ஊடகங்களில் எழுதி வருபவர். விருது பெற்றிருக்கக்கூடிய ஒவ்வொருமே ஒவ்வொரு விதத்தில் பெருமைக்குரியவர்கள். எனவே விருது பெற்றவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்.